ரணிலுடன் மீண்டும் பேச்சு நடத்தத் தயார் – சஜித் தெரிவிப்பு.
“பயனளிக்கும் மறுசீரமைப்புச் செயற்பாட்டின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் மீண்டும் பேச்சு நடத்த நான் தயார்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“வரப்பிரசாதங்கள் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்குப் பதிலாக பிரயோக ரீதியாக தலையிட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது நோக்கமாகும்.
அரசு கொண்டு வரும் நேர்மறையான, முற்போக்கான முன்மொழிவுகளை ஆதரிக்கும் வகையில் ஒரு வேலைத்திட்டம் வடிவமைக்கப்படும்.
ஒருபோதும் மக்களின் எண்ணங்களுக்கும், விருப்பங்களுக்கும் துரோகம் இழைக்கமாட்டேன்.
அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு கையிருப்பில் எஞ்சியுள்ள டொலர்களை அழிக்கும் செயற்பாட்டுக்கு ஒருபோதும் பங்களிக்கப்போவதில்லை.
தற்போது அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்பப் பதவிகள் அவசியமில்லை” – என்றார்.
மறுசீரமைப்புகளுக்கான புத்திஜீவிகள் ஒன்றியத்தின் விசேட கூட்டம் இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்போது நிலவும் சூழ்நிலையில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இதன்போது இடம்பெற்றது.