114 கோடி பார்வையாளர்களைக் கொண்ட 8 யூடியூப் சேனல்களை முடக்கி அரசு உத்தரவு!
மத நல்லிணக்கம், வெளிநாடுகளுடனான நட்புறவு மற்றும் பொது அமைதிக்கு பாதகம் ஏற்படுத்தும் விதமான பதிவுகளை வெளியிட்ட 8 யூடியூப் சேனல்கள் மத்திய அரசு தடை செய்துள்ளது. எட்டில் ஏழு சேனல்கள் இந்தியாவையும் ஒன்று பாகிஸ்தானையும் சேர்ந்தவை. இந்த நடவடிக்கையை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், 2021 தகவல் தொடர்பு சட்டத்தைப் பயன்படுத்தி, 8 யுட்யூப் செய்தி சேனல்கள், 1 பேஸ்புக் கணக்கு மற்றும் 2 பேஸ்புக் பதிவுகளை தடை செய்வதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்கள் மொத்தமாக, 114 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், 85 லட்சம் சப்ஸ்கிரைபர்களையும் கொண்டுள்ளன.
இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், “குறிப்பிட்ட இந்த யூடியூப் சேனல்களில், இந்தியாவில் மத நல்லிணக்கத்துக்கு மாறாக வெறுப்பை தூண்டும் வகையிலும், உரிமைகள் தொடர்பான தவறான தகவல்களும் பதிவேற்றப்பட்டிருந்தன. இந்திய அரசுக்கு எதிராகவும் நாட்டில் மதக்கலவரத்தை தூண்டி, பொதுஒழுங்கை சீர்குலைக்க கூடிய வகையிலும் இந்த பதிவுகள் உள்ளன.
இந்த யூடியூப் சேனல்கள், ஜம்மு காஷ்மீர் குறித்த பல்வேறு பொய்யான தகவல்களையும் பதிவேற்றியிருந்தன. தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு நட்புறவு தொடர்பான இந்த தகவல்கள் முற்றிலும் தவறான கண்ணோட்டம் கொண்டதாக உள்ளன. தகவல் தொடர்பு அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டுள்ள இந்த சேனல்கள், இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, நாட்டின் பொது அமைதி ஆகியவற்றுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்கள் அனைத்திலும் மத நல்லிணக்கம், வெளிநாடுகளுடனான நட்புறவு மற்றும் பொதுஅமைதிக்கு பாதகம் ஏற்படுத்தும் உள்ளடக்கம் கொண்ட வீடியோ காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த நடவடிக்கைகள் காரணமாக, 2021 டிசம்பர் முதல், 102 யூடியூப் செய்தி சேனல்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை தடை செய்வதற்கான நெறிமுறைகளை அமைச்சகம் வெளியிட்டது.
உண்மையான, நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் பாதுகாப்பான இணையவழி சுற்றுச்சூழலை உறுதி செய்வதிலும், இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாட்டு நட்புறவு மற்றும் பொதுஒழுங்கை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியை முறியடிப்பதிலும் அரசு உறுதியாக உள்ளது.” இவ்வாறு அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.