ரிலையன்ஸ் குழுமத்தால் தொடங்கப்படும் விலங்கியல் பூங்காவிற்கு எதிரான மனு தள்ளுபடி
குஜராத் ஜாம்நகரில் பசுமை விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மத்திய நிறுவனம் சார்பில் தொடங்கப்பட இருக்கும் உயிரியல் பூங்காவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிறுவனம் ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு அமைப்பாகும்.
இந்த நிறுவனத்துக்கு எதிராகத் தாக்கல்செய்யப்பட்ட மனுவுக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை எனவும் வெறும் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிறுவனத்துக்கு உயிரியல் பூங்காவைத் தொடங்குவதற்கு அதிகாரிகள் அளித்துள்ள அனுமதியில் சட்டத்துக்குப் புறம்பாக எதுவும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பசுமை விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மத்திய நிறுவனம் அளித்த பதில் மனுவில் அந்நிறுவனத்தின் செயல்பாடு, விலங்குகளைக் கொண்டுசெல்லுதல், அதனுடைய மற்ற செயல்பாடுகள் அனைத்தும் சட்டத்துக்கு உட்பட்டதே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைக்கப்படும் உயிரியல் பூங்காவின் கட்டுமானம், செயல்பாடு, விலங்கு நல மருத்துவர்கள், உயிரியல் நிபுணர்கள், விலங்கியல் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் நீதிமன்றத்தில் பசுமை விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மத்திய நிறுவனம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும் இந்நிறுவனம் ஒரு விலங்குகளின் நலனுக்காகவே செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம் என்பதையும் நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அது மட்டுமல்லாமல் தொடங்கப்படும் இந்த உயிரியல் பூங்கா வெறும் கல்வி சார்ந்த பயன்பாட்டுக்கு மட்டுமே செயல்படும் என்றும், இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள விலங்குகளின் நலன் இவற்றை மையமாக வைத்தே இயங்கும் எனவும் இந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.