கிழக்கில் 18 அதிகாரிகளுக்கு ‘வட்ஸ் அப்’பில் இடமாற்ற உத்தரவு! – ஜனாதிபதியிடம் முறைப்பாடு.

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள் 18 பேருக்கு அவசரமாக ‘வட்ஸ் அப்’ மூலம் திடீர் இடமாற்றக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
ஆளுநர் அனுராதா யகம்பத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் ஆ.மன்சூர் இடமாற்றத்துக்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஆனால், இடமாற்றக் கொள்கைக்கு முரணான வகையிலான இந்த உத்தரவுகளை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இலங்கை அரச சேவை மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்க சம்மேளனம் கடிதம் மூலம் கோரியுள்ளது.
இந்தக் கடிதத்தைச் சம்மேளனத்தின் தலைவர் எஸ். லோகநாதன் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.