பாமாயில் உற்பத்தியை அதிகரிக்க ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கியுள்ளது தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் எண்ணெய் பனை சாகுபடியை அதிகரிக்க ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திலும், தமிழக விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையிலும், எண்ணெய் பனை சாகுபடியை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் நல்ல வடிகால் வசதியுடன் வளமான செம்மண், வண்டல் மண் மற்றும் மணல் கலந்த களிமண் உள்ள நிலங்கள் அதிக அளவில் இருப்பதால் நமது மாநிலம் எண்ணெய் பனை சாகுபடிக்கு மிகவும் ஏற்றதாகும். எண்ணெய் பனை மரங்களை நாம் நன்கு பராமரித்து வந்தால், நான்காம் ஆண்டில் இருந்து எக்டேருக்கு 5 டன் வரையும், 8வது வருடத்தில் இருந்து 25-30 டன் வரையும் நிலையான மகசூல் தரவல்லது. எனவே, தமிழகத்தில் எண்ணெய் பனை சாகுபடி பரப்பை அதிகரித்து, பாமாயில் உற்பத்தியை உயர்த்துவதற்காக, தமிழ்நாடு அரசு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் – எண்ணெய் பனை திட்டத்தின் கீழ், நடவுக்கு தேவையான தரமான எண்ணெய் பனை கன்றுகள் முற்றிலும் இலவசமாக விவசாயிகளின் வயல்வெளிக்கே கொண்டு வந்து விநியோகம் செய்வதற்கு தனியார் நிறுவனம் மூலம் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எண்ணெய் பனை சாகுபடியானது தமிழகத்தில் குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் சிறந்த மாற்றுப்பயிராக கருதப்படுகிறது. எனவே,https://tnhorticulture.tn.gov.in/என்ற தமிழ்நாடு அரசு இணையதளத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.