சுடு நீர் ஏரியில் மிதந்த துண்டிக்கப்பட்ட மனித கால்.
யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவின் வெந்நீர் ஊற்று ஒன்றில் மனித பாதத்தின் ஒரு பகுதி காலணிக்குள் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவின் வெந்நீர் ஊற்றில் கால் பாதம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, குறித்த பூங்காவானது செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.
கால் பாதம் மிதந்த அந்த ஊற்றானது சுமார் 140 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையுடன் 53 அடி ஆழம் கொண்டது எனவும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 31ம் திகதி பூங்காவிற்குள் நடந்த மரணத்துடன் குறித்த கால் பாதம் தொடர்புடையதாக நம்பப்பட்டாலும், பூங்கா அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் 1890 முதல் வெப்ப நீரூற்று தொடர்பான காயங்களால் குறைந்தது 22 பேர் இறந்துள்ளனர். ஜூன் 2016ல், போர்ட்லேண்ட், ஓரிகானைச் சேர்ந்த 23 வயதான கொலின் நதானியேல் ஸ்காட் என்பவர் சரளை கற்கலில் கால் நழுவி கொதிக்கும் நீரூற்றில் விழுந்தது தான் சமீபத்திய நிகழ்வாக கூறப்படுகிறது.
இதுவரை அவரது உடல் பாகங்கள் மீட்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் ஆண்டுக்கு 4 மில்லியன் மக்கள் விஜயம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.