ஒரே மாதத்தில் 4 மருத்துவ மாணவர்கள் தற்கொலை.. உண்மையை கண்டறிய அரசுக்கு மருத்துவ அமைப்புகள் கோரிக்கை
தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் தற்கொலைகளுக்கான காரணத்தை அரசு கண்டறிய வேண்டும் என்று மருத்துவ மாணவர் நலவாரியம் அமைக்க வேண்டும் என்றும் மருத்துவ அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.
தமிழகத்தில் ஒரு மாதத்தில் நான்கு மருத்துவ மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதற்கு உரிய காரணத்தை அரசு உடனே கண்டறிய வேண்டும் என்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு பணிசுமை அதிகமாக உள்ளது என்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் தெரிவிக்கிறது. முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு 24 மணி நேர தொடர் பணி வழங்கப்படுவதால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாக பொதுநல வழக்கு சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் சார்பாக 2015ம் ஆண்டு தொடுக்கப்பட்டது.
அந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவ மாணவர்களுக்கு எட்டு மணி நேரத்துக்கு மேல் பணி வழங்கக் கூடாது என தீர்ப்பளித்தது. ஆனால் அந்த தீர்ப்பும் பின்பற்றப்படவில்லை என்றும் மருத்துவ மாணவர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்த மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் கூறுகிறார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “முதுநிலை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களின் பணிசுமை அதிகமாக உள்ளது என பலமுறை அரசின் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளோம்.
2015ம் ஆண்டு சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கில் எட்டு மணி நேரத்துக்கு மேல் பணி வழங்கக் கூடாது என உத்தரவிட்டது. எனினும் அந்த உத்தரவு பின்பற்றப்படுவதில்லை.
எனவே மருத்துவ மாணவர் நல வாரியம் அமைத்து மாணவர்களின் நலனை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் ஆக்ஸ்ட் 10ஆம் தேதி தேசிய மருத்துவ ஆணையம் முதுநிலை மருத்துவ மாணவர்களின் மனநலம் பேண கல்வி நிறுவனங்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.