அதானி நிறுவன துறைமுக திட்டத்துக்கு கேரளாவில் எதிர்ப்பு – மீனவர்கள் போராட்டம்
கேரளாவில் அதானி நிறுவனத்தின் துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காவல் துறையின் தடுப்புகளை மீறி மீனவர்கள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் கன்டெய்னர்களை கப்பல்களில் ஏற்றி இறக்குவதற்கான இந்தியாவின் முதலாவது மிகப்பெரும் முனையத்தை அமைக்க அதானி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரூ. 7,525 கோடி மதிப்பிலான இந்தப் பணிகள், கடந்த 2015-ம் ஆண்டில் தொடங்கின.
இந்நிலையில், அதானி துறைமுக திட்டத்துக்கு எதிராக நான்காவது கட்டப் போராட்டத்தை மீனவர்கள் கடந்த 16-ம் தேதி தொடங்கினர். கட்டுமானப் பணிகள் தொடங்கியபிறகு, பல ஏக்கர் கடலோரப் பகுதி அரித்து செல்லப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, தங்களுக்கு மறுவாழ்வை ஏற்படுத்துவதுடன், கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில், லத்தீன் திருச்சபையைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்களுடன் மாநில மீன்வளத் துறை அமைச்சர் பேச்சு நடத்துவதாக அறிவித்த நிலையில், துறைமுகம் பகுதியில் போராட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை குவிந்தனர். போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை தள்ளிவிட்டு, துறைமுகப் பணிகள் நடைபெறும் பகுதிக்குள் நுழைந்தனர்.
பின்னர் சமூகத் தலைவர்களின் சமாதானத்தை ஏற்று போராட்டக்காரர்கள் வெளியேறினர். துறைமுகப் பணிகளை நிறுத்திவிட்டு, கட்டுமானப் பணிகளால் கடலோரப் பகுதிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவியல்பூர்வ ஆய்வு நடத்துவதற்கு ஒப்புக் கொள்ளும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்கார்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 6 அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம், வரும் திங்கட்கிழமை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.