பஸிலின் அழைப்பை அடியோடு நிராகரித்தார் பீரிஸ்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு அதன் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச விடுத்த அழைப்பை பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது எனப் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தார். இருப்பினும் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் எதிர்த்தரப்பு வேட்பாளரான பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்கியிருந்தார்.
அத்துடன் ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்துக்கும் எதிராக அவர் வாக்களித்திருந்தார்.
இவ்வாறான காரணிகளால் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜி.எல் பீரிஸுக்குக் கட்சி மட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்குமாறும், கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து அவரை நீக்குமாறும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய பதவிகளை மறுசீரமைக்க கட்சியின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் வருடாந்த மாநாட்டின் முக்கிய தீர்மானங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாலக கொடவேஹா, சன்ன ஜயசுமன, டிலான் பெரேரா உட்பட பொதுஜன பெரமுனவின் 10 உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனித்துச் செயற்படும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில், பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணைந்து செயற்படுமாறு பஸில் ராஜபக்ச, பேராசிரியர் ஜி.எல் பீரிஸுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஜி.எல். பீரிஸ் நிராகரித்துள்ளார். அதேவேளை, தனது தரப்பினருடன் கலந்தாலோசித்து ஒரு தீர்மானத்தை அறிவிக்கவுள்ளார் என்றும் பஸில் ராஜபக்சவிடம் அவர் தெரிவித்துள்ளார்.
Mr பீரிஸ் கவனமாக இருக்கவேண்டும் பஸிலுடன் வாலாட்டவேண்டாம் அவர்கள் த……..கூட்டம் ஆகும்