உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் மதிப்பில் ஆயுத உதவி – அமெரிக்கா அறிவிப்பு.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தனது ராணுவ தாக்குதலை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. தற்போது வரை நீடித்து வரும் இந்த போர் காரணமாக இருதரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இந்த போர் தொடங்கிய பிறகு ரஷியா மீது சர்வதேச நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதே சமயம் உக்ரைனுடன் இணைந்து நேரடியாக போரில் பங்கேற்காவிட்டாலும், உக்ரைன் ராணுவத்திற்கு தேவையான ஆயுத உதவிகளை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வழங்கி வருகின்றன.
இதுவரை உக்ரைனுக்கு 19 ராணுவ தொகுப்புகள் அடங்கிய உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதன்படி ஏவுகணைகள், பீரங்கி மற்றும் கண்ணிவெடி அகற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இந்த தொகுப்பில் கணிசமான அளவு கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.