டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியாவுக்கு சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ்
டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் சிபிஐ சோதனைக்கு ஆளாகியுள்ள மனிஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு கூடுதல் நெருக்கடி தரும் விதமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிபிஐயின் இந்த நடவடிக்கைக்கு மனிஷ் சிசோடியா மத்திய பாஜக அரசை சாடியுள்ளார். மனிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டில் விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்னைகள் தலைதூக்கியுள்ள நிலையில், இதற்கு தீர்வு காணாமல் யாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பலாம் என பிரதமர் யோசித்துக் கொண்டிருப்பது கவலைக்குரிய விஷயம். 2024ஆம் ஆண்டில் மக்கள் அவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் தரவுள்ளார்கள் என ட்வீட் செய்துள்ளார்.
மேலும் அவர், ரெய்டில் ஒன்றும் கிடைக்கவில்லை. அப்படி இருக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி என்ன செய்யப்போகிறீர்கள். நான் எங்கே வர வேண்டும் என சொல்லுங்கள் மோடிஜி, நான் வரத் தயார் எனவும் கூறியுள்ளார். முன்னதாக, டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு நடைபெற்றுவரும் நிலையில், இந்த அரசு 2021-22 புதிய மதுக் கொள்கையை கொண்டுவந்தது. அதன்படி, மதுபானங்களைச் சில்லறை விற்னை செய்து கொள்ளவும், வீட்டிற்கே டெலிவரி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.
பரிசோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய கொள்கை இந்தாண்டு ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பின்னர் இந்த கொள்கையை ஆம் ஆத்மி அரசே வாபஸ் பெற்றது. இந்த கொள்கை அமல்படுத்துவதில் ஆம் ஆத்மி அரசு பெரும் ஊழல் செய்ததாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் குற்றஞ்சாட்டி சிபிஐ விசாரனை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார். மதுபான நிறுவனங்கள், பார்களுக்கு வழங்கிய டென்டரில் முறைகேடு நடைபெற்றதாக கூறி டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா வீடு, அவருக்கு சொந்தமான இடங்களில் இரு நாள்களுக்கு முன்னர் சோதனை நடைபெற்றன.