4308 காலி மருத்துவ பணியிடங்கள் அக்டோபர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 4308 மருத்துவ காலி பணியிடங்கள், அக்டோபர் மாதம் இறுதிக்குள் நிரப்பப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிட் சிறப்பு தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பின்னர் மருத்துவமனையை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு முழுவதும் 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 18 வயது கடந்தவர்களில் 96.66% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் எனவும் 89.5% பேர் 2வது தவணை செலுத்தி கொண்டனர் எனவும் தெரிவித்தார்.
மேலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவர்கள் எண்ணிக்கை 3.5 கோடி எனவும் அதனை இலக்காக கொண்டு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். இந்தியாவிலேயே தாய் சேய் மரணம் குறைவாக இருப்பது தமிழ்நாட்டில் தான் எனவும் இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 85 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் காலியாக உள்ள மருத்துவ டெக்னீஷியன் காலி பணியிடங்கள் உள்பட 4308 மருத்துவ காலி பணியிடங்களை அக்டோபர் மாதம் இறுதிக்குள் நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் 27 லட்சம் தடுப்பூசிகள் இன்றைக்கு கையிருப்பில் இருக்கிறது எனவும் இந்த தடுப்பூசிகளையும் போடுவதற்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், அடுத்த வாரம் டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டிற்கு முக்கியமான மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள், கோவையில் புதிய மருத்துவ கல்லூரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை தென்காசி பெரம்பலூர் காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை கேட்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் தடுப்பூசிகளின் கையிருப்பு குறைந்து வரும் நிலையில் கூடுதலாக தடுப்பூசிகள் வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.