இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்களே – மனோகனேசன்
மகாவம்சம், இராமாயணம் போன்ற புராணங்களின் அடிப்படையில் தமிழர்கள் இலங்கையின் மூத்த குடிகள் என கூறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனது உரையினை நாடாளுமன்றப் பதிவில் இருந்து நீக்குமாறு மனுஷ நாணயக்கார கூறியது அவரது தனிப்பட்ட கருத்தாகும். அவருடைய கருத்து ஐக்கிய மக்கள் சக்தியின் கருத்தாக ஒருபோதும் அமைந்து விடாது.
இலங்கையின் வரலாற்றை பார்க்கின்ற போது விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இங்கு இயக்கர், நாகர் என்ற இரு திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளது.
அது போல மகாவம்சத்தை விட காலத்தால் முற்பட்ட இதிகாசமாகிய இராமாயணத்தில் இலங்கைத் தீவு பற்றியும் அதன் மன்னனும் சிவ பக்தனுமாகிய இராவணன் பற்றியும் கூறப்பட்டுள்ளது. எனவே தமிழர்கள் இலங்கையின் மூத்த குடிகள் என கூறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, என்றார்.