அரகலய வசந்த போன்றவர்களை நடத்திய விதம் அரச பயங்கரவாதம்! அரச வன்முறை! – சஜித் (Video)
ஜனநாயக நாட்டில் பேச்சு, ஒன்றுகூடல் மற்றும் போராட்டம் நடத்துவதற்கான சுதந்திரம் உள்ளதாகவும், ஆனால் இன்றைய நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் இலங்கையில் அந்த சுதந்திரம் முற்றாக அகற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி வசந்த முதலிகே உள்ளிட்டோரை பயங்கரவாத தடுப்புக் காவலில் வைக்க முயல்கிறார்கள் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதனை அரச மிருகத்தனம் எனவும் குறிப்பிட்டார்.
அரச போராளிகள், அரச பயங்கரவாதம் மற்றும் அரச வன்முறைகளை கண்டிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த நாட்டிலுள்ள எந்தவொரு மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகவும் தன்னை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து கோட்டா கோ கோம் என ராஜபக்சக்களை விரட்டியடித்து விட்டு , மீண்டும் கோட்டா கம் கோம் என அவர்களை களத்தில் இறக்கி வருகிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் , ருவன்வெல்ல தொகுதிக் குழுக் கூட்டம் நேற்று (20) நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் ருவன்வெல்ல பிரதான தொகுதி அமைப்பாளர் திருமதி துசிதா விஜேமான்ன இதனை ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
நாட்டு மக்கள் பாரிய துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில் அவர்களுக்கு எவ்வித நட்டஈடுகளும் கிடைக்காத நிலையில், யார் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் வினவினார்.