பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கான்வாய் மீது கல்வீச்சு தாக்குதல்… 13 பேர் கைது!
பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் கான்வாய் மீது சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்குள்ள காயா நகரத்திற்கு வருகை தர நிதீஷ் குமார் திட்டமிட்டுள்ளார்.
முதலமைச்சரின் வருகையை ஒட்டி அவரின் பாதுகாப்பு கான்வாய் நேற்று ஆய்வு மேற்கொண்டுள்ளது. அப்போது சோஹ்கி என்ற கிராமத்தில் கான்வாய் சென்று கொண்டிருந்த போது அந்த கான்வாய் வாகனத்தை கிராமத்தினர் சிலர் தடுத்து வழிமறித்துள்ளனர். மேலும், கான்வாய் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கான்வாய் வாகனத்தில் முதலமைச்சர் இல்லாத நிலையில், முதலமைச்சரின் பாதுகாப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் மூன்று வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக கிராமவாசிகள் 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி காவல் ஆய்வாளர் கிருஷ்ண குமார் கூறுகையில், ‘கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சமீபத்தில் தொலைந்து போய் பின்னர் கழிவு நீர் வடிகாலில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அப்பகுதிக்கு முதலமைச்சர் கான்வாய் வருவதை அறிந்து ஆத்திரத்தை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்’ என தெரிவித்தார். முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாய் மீது நடைபெற்ற இந்த கல்வீச்சு தாக்குதல் சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.