கல்கத்தாவில் வரவிருக்கும் இந்தியப் பிரிவினை அருங்காட்சியகம் !
1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்து நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. வங்காளமும் மேற்கு மற்றும் கிழக்கு என்று பிரிக்கபட்டது. கிழக்கு வங்காளம் அடங்கிய நிலப்பரப்பு கிழக்கு பாகிஸ்தான் என்று பெயரிடப்பட்டது. பின்னர் 1971 இல் வங்காளதேச விடுதலைப் போர் நிகழ்ந்தது. பங்களாதேஷ் என்ற நாடு உதயமானது.
இந்த பிரிவினையில் ஏற்பட்ட நினைவுகளை ஒன்றிணைத்து அதில் கிழக்கு இந்திய மாநிலங்களின் பணிகளை முன்னிலைப்படுத்த ஒரு பிரிவினை அருங்காட்சியகத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் ஒரு மெய்நிகர் அருங்காட்சியகமும் பின்னர் விரிவான அருங்காட்சியக கட்டிடமும் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
கொல்கத்தா பிரிவினை அருங்காட்சியகத் திட்டத்திற்கு (கேபிஎம்பி) தலைமை தாங்கும் பிரிவினை அறிஞர் ரிதுபர்ணா ராய், இந்த அருங்காட்சியகத்தை உருவாக்குவதன் நோக்கம் கிழக்கு இந்தியாவின் வங்காளத்தின் பிரிவினை அனுபவத்தையும், பிரிவினை மற்றும் அதன் பின்விளைவுகள் மற்றும் பிற்கால வாழ்க்கையையும் மிக விரிவான முறையில் நினைவுபடுத்துவதாகும் என்றார்.
மெய்நிகர் அருங்காட்சியகம், KPMP மற்றும் கட்டிடக்கலை நகர்ப்புற ஆராய்ச்சி நிறுவனம் (AUR) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், டாடா ஸ்டீல் உருவாக்க உள்ளது. மேலும் இது அனைவருக்கும் இலவச களஞ்சியமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆகஸ்ட் 24 அன்று திறக்கப்படும் இந்த அருங்காட்சியகத்தில் ஆண்டு வாரியான காப்பகங்கள், ஒரு மெய்நிகர் கலைக்கூடம் மற்றும் வாய்வழி வரலாற்றுப் பிரிவு ஆகியவை இருக்கும். மெய்நிகர் அருங்காட்சியக யோசனை
பிரிவினைவாதம் தொடர்பாக ஆய்வு செய்துவரும் ரிதுபர்ணா ராய், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார். ஆராய்ச்சிக்காக ஜெர்மன் , இங்கிலாந்து முதலிய ஐரோப்பிய அருங்காட்சியகங்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். அங்கு அவர் அறிந்த வங்காளதேசம்- மேற்கு வங்க இந்திய பரப்பின் தொடர்புகளைக் கொண்டு இந்திய பிரிவினையில் வங்காள பகுதியின் செயல்களை அறிந்தார்.
‘பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான் – இந்திய பகுதியில் உள்ள பஞ்சாப் பெரிதும் பேசப்பட்டது. அங்குள்ள நிகழ்வுகளையும், நினைவுகளையும் அரசுகள் பெரிதும் கொண்டாடின. பன்மொழிகளில் அதன் படைப்புகளை வெளியிடப்பட்டது. ஆனால் வங்காள பகுதி உள்ளடக்கிய கிழக்கு இந்தியாவின் சொற்கள் கண்டுகொள்ளப்படவில்லை. இது ஒரு ஏற்றத்தாழ்வு பார்க்கும் நிலை. வங்காள மக்களின் நிலையும் மக்களுக்குச் சொல்ல வேண்டும்.
பிரிவினைக்குப் பின்பும் உடை, உணவு, கலாச்சாரம், வழக்கு என்று இந்தியாவும் வங்காளதேசமும் ஒரு முறையில் சகோதரத்துவத்துடன் இயங்கி வருகிறது. எனவே அதைப் பறைசாற்றவும் பிரிவினையின் தாக்கங்களை வரும் தலைமுறைக்குச் சொல்லவும் இந்த மெய்நிகர் அருங்காட்சியகத்தைத் தொடங்க உள்ளோம்’ என்றார் ராய்.
மெய்நிகர் அருங்காட்சியகத்தில் கிடைக்கும் நிதியை வைத்து கல்கத்தாவில் ஒரு புதிய அருங்காட்சியக கட்டிடம் கட்டி, காட்சிப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.