டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்… 144 தடை, போலீஸ் குவிப்பால் பதற்றம்
டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு சங்கங்களை சேர்ந்த விவசாயிகளை திரட்டி தங்களின் கோரிக்கையை முன்வைக்க விவசாயிகள் டெல்லியில் இன்று மகாபஞ்சாயத்து நடத்தவுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னணி விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவித்ததால், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
எனினும், வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று முதல் போராட்டம் நடத்தப்படும் என 40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக் கிசான் மோர்ச்சா அமைப்பு அறிவித்துள்ளது. இதையொட்டி, அண்டை மாநிலங்களில் இருந்து வரும் விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக, டெல்லி – ஹரியானா எல்லையான திக்ரியில் டெல்லி காவல் துறையினர் சிமெண்ட் தடுப்புகளை ஏற்படுத்தி, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், காசிபூரில் பாரதிய கிஷான் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத்தை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதுதொடர்பான புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ள அவர், மத்திய அரசுக்கு ஆதரவாக டெல்லி காவல் துறை செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். லக்கிம்பூர் கேரி விவசாயிகள் கொலை சம்பவம் தொடர்பாக நீதி கேட்டும் பல்வேறு போராட்டங்களில் கைதான விவசாயிகளை விடுவிக்கக் கோரியும் விவசாயிகள் இந்த போராட்டத்தில் குரலெழுப்பவுள்ளனர்.