அரசியலுக்கு வருவாரா கோட்டா! – தெரியாது என்கிறார் சாகர.
“விரைவில் நாடு திரும்பும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, செயற்பாட்டு அரசியலுக்கு வருவாரா என்பது தொடர்பில் எனக்குத் தெரியாது.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறும், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளோம்.
நாடு திரும்பும் முன்னாள் ஜனாதிபதி செயற்பாட்டு அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு அறிவிக்க முடியாது. அது தொடர்பில் முடிவெடுக்கும் சுதந்திரம் அவருக்கே உள்ளது. அவர் மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம்” – என்றார்.