அதிரடி நடவடிக்கையில் கொலம்பியா – அனுமதிக்குமா அமெரிக்கா? : சண் தவராஜா
கொலம்பிய அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிபீடம் ஏறியுள்ள மேனாள் போராளியும், தலைநகர் பொகோட்டாவின் ஆளுனருமாகிய குஸ்தாவோ பெட்ரோ அதிரடியான பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். புதிய அமைச்சரவையை அறிவித்துள்ள அவர் உடனடியாகவே அயல் நாடான வெனிசுவேலாவுடன் துண்டிக்கப்பட்டிருந்த தூதரகத் தொடர்புகளைப் புதுப்பித்துள்ளார். அது மாத்திரமன்றி படைத் துறை மற்றும் காவல் துறையின் தலைமைப் பொறுப்புகளுக்குப் புதியவர்களையும் நியமித்துள்ளார்.
அவரது அதிரடி நடவடிக்கைகள், புதிய அறிவிப்புகள் என்பவை உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள சூழலில், இந்த நடவடிக்கைகளாலும், அறிவிப்புகளாலும் நேரடியாகப் பாதிக்கப்படப் போகின்ற உள்நாட்டில் வாழும் செல்வந்தர்களும், ஊழலில் மூழ்கித் திளைத்த படை அதிகாரிகளும் இவற்றை மௌனமாக ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. அது மாத்திரமன்றி இவர்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்பின் விளைவாகத் தனது நலன்கள் சேதமாகும் அபாயத்தில் உள்ள அமெரிக்க அரசாங்கமும், அதன் நலன் பேணும் பாதுகாப்பு முகவர்களும் இவற்றைத் தொடர்ந்து அனுமதிப்பார்களா என்ற சந்தேகமும் எழுப்பப்படுகின்றது.
கொலம்பியா என்றதும் ஞாபகத்துக்கு வருவது போதைப் பொருள் கடத்தல், அது தொடர்பிலான வன்முறைகள், கடத்தல் கும்பல்கள், படையினரின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் போன்றவையே. அமெரிக்கா தலைமையிலான ‘போதைப் பொருள்களுக்கு எதிரான போர்’ என்ற செயற்திட்டத்தின் முக்கிய பங்காளி நாடாக விளங்கும் கொலம்பியா, நேட்டோ இராணுவக் கூட்டமைப்பின் அந்தப் பிராந்தியத்திலேயே உள்ள ஒரேயோரு அங்கத்துவ நாடாகவும் உள்ளது. போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைக்காக பெருந்தொகைப் பணத்தையும், மனித வளத்தையும் அமெரிக்கா செலவிட்டு வந்த போதிலும், போதைப் பொருள் அபாயம் குறைந்தபாடாக இல்லை. மாறாக, அந்த அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதையே காண முடிகின்றது.
இந்த விடயத்தைத் தனது கன்னிப் பேச்சில் தொட்டுக் காட்டியிருக்கின்றார் பெட்ரோ. “போதைப் பொருள்களுக்கு எதிரான போர் தோல்வியைத் தழுவியுள்ளது என்பதை உலகம் ஏற்றுக் கொள்ளும் வேளை வந்துவிட்டது. இந்தப் போரின் விளைவாக இதுவரை ஒரு மில்லியன் வரையான லத்தீன் அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுள் அநேகமானவர்கள் கொலம்பியர்கள். இது தவிர, 70,000 வரையான வட அமெரிக்கர்களும் போதைப் பொருள் பாவனையால் மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளனர். எனினும், அவர்கள் பாவித்த போதைப் பொருட்கள் லத்தீன் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டவை அல்ல. போதைப் பொருள்களுக்கு எதிரான இந்தப் போர் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களைப் பலப்படுத்தியுள்ள அதேநேரம் அரசுகளைப் பலவீனப்படுத்தியும் உள்ளது. அது மாத்திரமன்றி கொலம்பியா உள்ளிட்ட அரசுகள் குற்றங்கள் புரியவும் ஏதுவாக அமைந்திருந்தது” என்கிறார் அவர்.
அமெரிக்காவின் தந்திரோபாயங்களைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ள பெட்ரோ, தனது நாட்டில் அமெரிக்காவின் கைப்பொம்மையாகச் செயற்பட்ட படை அதிகாரிகளையும் தடாலடியாக மாற்றியுள்ளார். படைத் துறைத் தலைவர், காவல் துறை, தரைப் படை, கடற் படை போன்றவற்றின் தலைமைப் பதவிகளுக்குப் புதியவர்களை நியமித்துள்ளார். பதவியேற்ற ஒரு வார காலத்திலேயே – தேர்தல் பரப்புரையின் போது குறிப்பிட்டதைப் போன்று – புதிய படை அதிகாரிகளை நியமித்த அவர், எத்தனை எதிரிகள் கொல்லப்பட்டார்கள் என்ற கணக்கின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் நடைமுறை இனிமேல் இருக்காது எனப் பிரகடனம் செய்தார். “பாதுகாப்பு என்பது எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற அடிப்படையில் அல்லாது மரணங்கள் மற்றும் படுகொலைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதிலும், மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் என்பவற்றை மேம்படுத்துதல் என்பவற்றிலுமேயே தங்கியுள்ளது” என்பது அவரது கருத்து. புதிதாகப் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும், ஊழலிலும் மனித உரிமை மீறல்களிலும் ஒருபோதும் ஈடுபட்டிராதவர்கள் என்ற அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இவை தவிர, கொலம்பிய போராட்டக் குழுவான தேசிய விடுதலை இராணுவத்துடனான சமாதானப் பேச்சுக்களையும் பெட்ரோ உடனடியாக ஆரம்பித்துள்ளார். அத்தோடு, தற்போது கொலம்பியாவில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஆயுதந் தாங்கிய ஏனைய சிறுசிறு குழுக்களோடும் சமாதானத்தை எட்டுவதற்கான ஆர்வத்தையும் அவர் வெளியிட்டும் உள்ளார்.
அதேவேளை, பெட்ரோ அறிமுகம் செய்யவுள்ள வரிச் சீர்திருத்த நடவடிக்கைகளும் கவனத்துக்கு உரியவையாக உள்ளன. 50 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட கொலம்பியாவில் ஏறக்குறைய அரைவாசிக்கும் அதிகமானோர் வறுமையில் வாழ்வதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் நாட்டின் செல்வத்தில் 90 விழுக்காடு வெறும் 10 வீதமானோர் கையிலேயே உள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் 10 பில்லியன் டொலரை வரி விதிப்பின் மூலம் எட்டுவதற்கு பெட்ரோ திட்டமிட்டுள்ளார்.
செல்வந்தர்களுக்கு அதிக வரியை விதிப்பதன் மூலமும், பெருந் தேசியக் கம்பனிகளுக்கான வரிச் சலுகைகளை இல்லாமல் செய்வதன் ஊடாகவும் எட்டப்படும் இந்த நிதி மூலம் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல சமூகநலத் திட்டங்களை நிறைவேற்ற புதிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நாட்டின் செல்வத்தையும், தேசிய வளங்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள செல்வந்தர்கள் இதற்கு அனுமதிப்பார்களா என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. அது மாத்திரமன்றி தனது நலன்களுக்கு முரணான வகையிலான இத்தகைய போக்கு தனது கொல்லைப் புறத்தில் தலையெடுப்பதை அமெரிக்க ஏகாதிபத்தியம் சகித்துக் கொள்ளுமா என்ற சந்தேகமும் எழுகின்றது.
உலகம் முழுவதிலும் தனக்கு விசுவாசமான ஆட்சியாளர்களைப் பதவிக்குக் கொண்டு வருவதில் அதிக கரிசனை கொண்டு செயற்படும் ஒரு நாடு உண்டென்றால் அது அமெரிக்காவே என்பது சிறு பிள்ளைக்கும் கூடத் தெரியும். மனித உரிமைகளைப் பேணுதல், ஜனநாயகப் பண்புகளை மேம்படுத்துதல், மேற்குலக விழுமியங்களை அறிமுகம் செய்தல், நிலைபேறான அபிவிருத்தி, மனதவள மேம்பாடு, பொருளாதார உதவிகள், நிபுணத்துவ ஆலோசனை, தொண்டு நிறுவனங்களுக்கு உதவியளித்தல் எனச் சாத்தியமான சகல வழிமுறைகளையும் பாவித்து தனது இலக்கை எட்டுவதில் அமெரிக்கா கில்லாடி. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான உலக அரசியல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை புரியும். சி.ஐ.ஏ. என்ற தனது உளவு அமைப்பைக் கையில் வைத்துக்கொண்டே அமெரிக்கா இந்த வேலைகளைச் செய்து வந்தது. தற்போதும் செய்து வருகின்றது.
ஆனாலும், மாறிவரும் உலக ஒழுங்கில், அத்தி பூத்தாற் போல மக்கள் நேய ஆட்சியாளர்களும் உலகின் பல நாடுகளிலும் பதவிக்கு வரவே செய்கின்றனர். முன்னைய காலங்களைப் போன்று தனது தந்திரோபாயங்களைப் பாவித்து அவற்றை அமெரிக்காவால் தடுத்துவிட முடியாமற் போகின்றது. அவ்வாறு பதவியில் அமர்பவர்களை ஒழித்துக் கட்டப் போராடும் அமெரிக்கா, முடியாத போதில் அவர்களைத் தன் வசம் ஈர்க்கும் முயற்சிகளில் ஈடுபடும்.
பெட்ரோ விடயத்தில் என்ன நடக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும், கொரோனாப் பெருந் தொற்றை கடந்த அரசாங்கம் கையாண்ட விதத்தைக் காரணமாக வைத்துக் கிளர்ந்தெழுந்த மக்களின் எழுச்சியின் அறுவடையாகவே பெட்ரோவின் வெற்றி நிகழ்ந்தது. எனவே, அந்த மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அவருக்கு உள்ளது. அவ்வாறு நிறைவேற்ற முயலும் போது அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நடந்து கொள்ள வேண்டி ஏற்படும். அதற்கு அமெரிக்கா எவ்வளவு தூரம் இடம் வழங்கும் என்பதை அடுத்தடுத்து நிகழப் போகும் சம்பவங்கள் மூலம் நிச்சயமாக அறிந்து கொள்ளலாம்.