அரசுக்கு கிடைத்துள்ளது, நரகத்துக்கு போகும் வழியில் கிடைத்த இடைவேளை : நாலக கொடஹேவா
“நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் அண்மைக்காலமாக மூன்று அரசாங்கங்களின் தவறான கொள்கைகளினால் மக்கள் இன்று அவதிப்படுகின்றனர்” என முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நிபுணர்கள் குழுவைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாக சிலர் நினைக்கின்றனர்.
அது சரியான கருத்து அல்ல.
இந்த விஷயத்தில் அவரது அரசாங்கத்திற்கும் ஒரு பெரிய பொறுப்பு இருந்தது, ஆனால் இந்த நெருக்கடி நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கியது.
இதற்கு பல அரசாங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும். இதேவேளை, யுத்தத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த மூன்று அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும்.
2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர், அரசாங்கம் உள்கட்டமைப்பு அபிவிருத்திக்காக பணத்தை செலவிட ஆரம்பித்தது. அப்போது துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் போன்றவற்றைப் பற்றி அரசாங்கம் பெருமையாகப் பேசியது.
ஆனால் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் பாரியளவில் கடனுதவி பெறுவதை அப்போது எவராலும் கவனிக்கப்படவில்லை.
2009-2015 காலப்பகுதியில் நாட்டின் கடன் 2200 பில்லியனில் இருந்து 7400 பில்லியன் ரூபாவாக அதிகரித்தது.
இந்த கடன்களில் அதிக அளவு வெளிநாட்டு கடன்கள் இருந்தன. குறிப்பாக ராஜபக்ச அரசுதான் அதிக வட்டிக்கு குறுகிய கால வணிகக் கடன்களை வாங்கத் தொடங்கியது. இந்த முறைக்காக அவர்கள் 5 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றிருந்தனர்
நாட்டில் வாழும் எவரும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த கடன் வாங்குகிறார்கள். கார் வாங்குவது, வீடு கட்டுவது, சொந்தமாக தொழில் தொடங்குவது என்பது பெரும்பாலும் நாம் சம்பாதிக்கும் வருமானத்தில் சாத்தியமில்லை. அதனால் கடன் வாங்க வேண்டும். ஆனால், கடனை அடைக்க, வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் படிப்படியாகக் கடன்கள் குவிந்து சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்.
அரசாங்கத்துக்கும் பல வருமான ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக வரி வருவாய், அரசு நிறுவனங்களின் லாபம், உரிமக் கட்டணம் போன்றவை.
ஆனால் இந்த வருமானம் போதவில்லை என்றால் அதற்கான செலவை அரசே ஏற்று வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும். அதனால்தான் அந்த வழியில் கடன் வாங்க வேண்டும். ஆனால் ஒரு அரசு கூட கடன் வாங்கும் போது அதை எப்படி திருப்பி செலுத்துவது என்று யோசிக்கவும் வேண்டும்.
2009-2015 காலப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தொடர்ந்து கடன் வாங்கியது, ஆனால் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது என்று அந்த அரசு திட்டமிடவில்லை.
கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டப்படும் விமான நிலையத்துக்கு விமானங்கள் வரவில்லை என்றால் வருமானம் எங்கிருந்து வரும்? நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தி நாட்டின் தொழில்கள் வளர்ச்சியடையவில்லை என்றால், என்ன பயன்? ஏற்றுமதி தொழிலை எப்படி வளர்க்க வேண்டும் என்று பார்க்காமல் துறைமுகத்தை மட்டும் கட்டினால் நாடு வளர்ச்சி அடையுமா?
இது தவிர, இன்னொரு பிரச்சனையும் இருந்தது. அப்போது, இந்த பாரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்குப் பின்னால் பெரும் விரயமும், ஊழலும் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதிலும் உண்மை இருந்தது.
ஏனெனில் முடிக்கப்பட்ட பல திட்டங்களின் உண்மையான மதிப்பு செலவழித்த தொகையை நியாயப்படுத்த போதுமானதாக இருக்கவில்லை.
ஒரு உதாரணம் தருகிறேன். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு 1750 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இதற்காக சீனாவிடம் இருந்து கடன் வழங்கப்பட்டது.
பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த துறைமுகம் சீனாவிற்கு விற்கப்பட்டது.
அப்போது இரண்டு சீன நிறுவனங்கள் துறைமுகத்தை ஏலம் எடுத்தன.
அதிகபட்ச ஏலம் 1100 மில்லியன் டாலர்கள். அதாவது துறைமுகம் கட்ட வாங்கிய கடன் பணம் எங்கே போனது என்ற கேள்வியை யாராவது கேட்க வேண்டும். துறைமுகம் கட்ட வாங்கிய கடனில் ஒரு பகுதி வீணாகிவிட்டதா, திருடப்பட்டதா அல்லது ஆவியாகிவிட்டதா? அல்லது யாராவது துறைமுகத்தை குறைந்த விலைக்கு விற்று பதுக்கிக் கொண்டார்களா? அந்தக் கேள்விகளிலும் நியாயம் இருக்கிறது.
அது எப்படியிருந்தாலும், 2015 இல் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு, ரணில் விக்கிரமசிங்க, மைத்தரிபால சிறிசேனவுடன் ஆட்சிக்கு வந்தார்.
இவர்கள் நாட்டின் கடன் சுமையை குறைப்பார்கள் என மக்கள் நினைத்தனர். அதுவரை இருந்த தேவையற்ற விரயங்களையும் , ஊழலையும் ஒழிப்பார்கள் என எதிர்பார்த்தார்கள் .
ஆனால் அவை இரண்டையும் இவர்கள், முன்னைய அரசாங்கத்தை விட அதிகமாக செய்தனர்.
ஆட்சிக்கு வந்து 3 மாதங்களே ஆன நிலையில், மானங்கெட்ட பெரும் வங்கி கொள்ளை எனப்படும் இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி நடந்தது.
அத்தோடு நிலக்கரி ஊழல், உர (பசளை) ஊழல், மக்காச்சோள ஊழல் என பல ஊழல்கள் நடந்தன.
கடன் பெற்ற விதத்திலும் நல்லாட்சியினர் , முன்னைய அரசாங்கத்திற்கு குறைந்தவர்களாக இல்லை.
நல்லாட்சி காலமான 5 ஆண்டுகளில் மொத்தக் கடன் 7400 பில்லியன் ரூபாயிலிருந்து 13,000 பில்லியன் ரூபாயாக அதிகரித்தது.
5 ஆண்டுகளில் அவர்கள் 12 பில்லியன் டொலர்கள் குறுகிய கால வெளிநாட்டுக் கடன்களை அதிக வட்டி விகிதத்தில் பெற்றனர்.
தேவையில்லாத பணத்தை கடனாக பெற்று செலவு செய்த மகிந்த ராஜபக்ச , செய்தது என்ன என்பவையாவது , நம் கண் முன் காண முடிகிறது.
ஆனால் ரணில் விக்கிரமசிங்க , வாங்கிய கடனில் என்ன செய்தார் என நாம் கண்டுபிடிப்பதே கடினம். எதுவுமில்லை.
எப்படியாவது கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்த குழுவினர் , எப்போது வெடிக்கும் என தெரியாதது போன்ற பொருளாதார பிரச்சனை ஒன்றில் சிக்கிக் கொள்ளப் போகிறோம் என அறிந்தே இருந்தார்கள்.
எனவே, அந்த பொருளாதாரத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்று கவனமாக சிந்தித்து ஒரு திட்டத்தை வகுத்தோம்.
கோட்டாபய ராஜபக்ஷ அந்த திட்டத்தை மேடைக்கு மேடைக்கு பேசினார். அந்தத் திட்டத்தை நம்பித்தான் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.
வாக்களித்த மக்கள் உண்மையான மாற்றத்தை எதிர்பார்த்தனர்.
புதிய குழுவினர் வந்து, இந்த வீண் ஊழலை தடுத்து, அரசை திறம்படச் செய்து, இளைய தலைமுறை கேட்பது போன்ற ஒரு மாற்றத்தை ( SYSTEM CHANGE) செய்வார்கள் என மக்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர்.
ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ , திட்டத்தை தயாரித்தவர்களை மறந்துவிட்டு 2015க்கு முன்னர் நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகித்தவர்களிடமே மீண்டும் பொருளாதாரத்தை ஒப்படைத்தார்.
பழைய உறவினர்கள், பழைய அரசியல்வாதிகள், பழைய அதிகாரிகள். அவர்களால் எப்படி ஒரு SYSTEM CHANGE ஏற்படும்?
சுமார் 2 தசாப்தங்களாக பொருளாதாரத்தை நாசப்படுத்தியவர்கள் , வழமை போன்று மக்களின் தேவைகளை மறந்து தமக்கு விரும்பியவாறு செயற்பட்டனர்.
பொருளாதாரம் குறித்து எவரோடும் அவர்கள் கலந்துரையாடவில்லை. அதனால் முந்தைய தவறுகள் மீண்டும் மீண்டும் நடந்தன. இறுதியில் நாமும் தோல்வியடைந்து பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. ஜனாதிபதியும் வெளியேற வேண்டியதாயிற்று
இன்று நாம் எதிர்கொள்ளும் இரண்டு முக்கிய பிரச்சனைகள் உள்ளன.
ஒன்று, உள்நாட்டுச் செலவுக்கும் உள்நாட்டு வருமானத்திற்கும் இடையே உள்ள இடைவெளி, ஆண்டுக்கு சுமார் 2000 பில்லியன் ரூபாய். மேலும் வெளிநாட்டு செலவுக்கும் வெளிநாட்டு வருமானத்திற்கும் இடையே உள்ள இடைவெளி ஆண்டுக்கு 7 பில்லியன் டாலர்கள் .
உள்ளூர் வருமான இடைவெளியை பணத்தை அச்சடித்து, நாட்டின் பணவீக்கத்தை விண்ணை முட்டும் அளவுக்கு கொண்டு சென்றாவது ஈடுகட்டலாம் என்று வைத்துக் கொள்வோம். வெளிநாட்டு நாணயத்தை நாம் அச்சடிக்க முடியாது. நீங்கள் வெளிநாட்டு பணத்தை கொண்டு வரவே வேண்டும்.
இந்த ஆண்டு முதல் அடுத்த 5-6 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 5 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுக் கடனாகவும் வட்டியாகவும் செலுத்த வேண்டியுள்ளது.
ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வெளிநாட்டுக் கடனாக செலுத்தும் கடன் தொகையை கட்டுவதை நிறுத்திவிட்டோம். சுருக்கமாக சொன்னால் , நாடு திவாலாகி விட்டதை ஏற்றாகிவிட்டது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகி, ஏதோ மாயாஜாலம் செய்ததாலோ அல்லது வெளிநாடுகளில் இருந்து டொலர் வருவதாலோ , இப்போது கிடைக்கும் எண்ணெய், எரிவாயு இறக்குமதி எல்லாம் நடக்கிறது என அநேகர் நினைக்கலாம். எமது நாட்டு முக்கியமான மேற் சொன்ன பிரச்சினைகள் தற்காலிகமாகத் தீர்ந்தது போலத் தோன்றுகிறதே தவிர அது ஒரு கானல் நீர்.
இவை நாம் கடனைத் திருப்பிச் செலுத்தாத திவாலான அரசுக்கு கிடைத்த தற்காலிக நிவாரணம். கடன்களை திருப்பி செலுத்தாமல் இருப்பதால் மூச்சு விடக் கிடைத்த ஒரு தருணம். இது நரகத்துக்கு போகும் வழியில் கிடைத்த இடைவேளை போன்றது.
நாம் வாங்கிய கடனை செலுத்தாமல் இருக்கும் போது , தற்காலிக சந்தோசம் ஒன்று கிடைக்கும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும், ஆனால் கடனை செலுத்தாமைக்காக என்றோ ஒரு நாள் போலீசார் உங்களைப் பிடித்து சிறைக்குள் தள்ளுவார்கள்.
அதனால்தான் இலங்கைக்கு எல்லா நேரமும் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்க முடியாது. விரைவில் இந்த பிரச்சனை கழுத்தை இறுக்கும்.
அப்போது நம்மால் வெளிநாட்டில் இருந்து எதையுமே கொண்டு வர முடியாது போகும். அப்போது எங்களிடம் எரிபொருளும் இருக்காது, எரிவாயுவும் இருக்காது, உரமும் இருக்காது, பால் பவுடரும் இருக்காது, மருந்து இருக்காது. எதுவுமே இருக்காது.
எனவே, இது விளையாடும் நேரமல்ல, நேரத்தை வீணடிக்காமல் அரசு செயலில் இறங்க வேண்டும், ஆனால் இன்னும் அப்படி எந்தவொரு திட்டம் குறித்தும் இன்றைய அரசு சிந்திப்பதாக தெரியவில்லை.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று 3 மாதங்கள் ஆகிறது. அவரால் நாட்டுக்கு எவ்வளவு டொலர்கள் கொண்டு வர முடிந்தது? அவர் ஜனாதிபதியாகி ஒரு மாதம் ஆகிறது, இன்னும் ஒரு நிரந்தர அமைச்சரவையைக் கூட அவரால் நியமிக்க முடியவில்லையே?
இந்த பிரச்சினைகள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். எமக்கு அமைச்சுப் பதவியோ அல்லது வேறு சலுகைகளோ வேண்டாம் என ஜனாதிபதியிடம் தெளிவாக கூறியுள்ளோம்.
அமைச்சு பதவிகளுக்காக போராடுபவர்களுக்கு அதைக் கொடுங்கள். அவர்களுக்கு அதனால் நன்மைகள் இருக்கலாம். நாங்கள் அவற்றை எதிர்பார்ப்பவர்கள் அல்ல. இந்த நாட்டு மக்களை துன்பத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும். எனவே, அரசு சரியானதைச் செய்தால், எந்த நேரத்திலும் ஆதரவளிக்கத் தயாராக உள்ளோம்.
ஆனால் கடந்த அரசாங்கங்கள் போன்று மக்களை ஏமாற்றி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக நாட்டை மீண்டும் ஊழல் தலைவிரித்தாடும் முன்னைய யுகத்திற்கே நாட்டை கொண்டு செல்ல முயன்றால் , மக்களை விழிப்படைய வைத்து, அதற்கு எதிராக போராட தயாராகவே உள்ளோம்.
– ஊடக பிரிவு
(ஜீவன்)