எதிர்ப்புக்கு மத்தியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தியமையை நியாயப்படுத்துகின்றார் ரணில்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரையும் தடுத்துவைத்து விசாரணை செய்யப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தப்படுத்தியமையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியாயப்படுத்தியுள்ளார்.
“போராட்டங்களின்போது பயங்கரவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றனவா என்பது தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தியே விசாரணைகளை மேற்கொள்ள முடியும்” என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வசந்த முதலிகேயின் கைதுடன் அரசைத் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகேவைத் தடுத்து வைக்கும் உத்தரவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திடக் கூடாது என்று மனித உரிமை பாதுகாவலர்கள் தொடர்பிலான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் மேரி லோலர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பழிவாங்கும் நோக்கில் கைதுசெய்யப்படவில்லை. அவர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் உள்ளன. அவரைக் கைதுசெய்யும் உத்தரவை நீதிமன்றத்திடம் ஏற்கனவே பொலிஸார் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், சில தினங்ளுக்கு முன்னர் கொழும்பில் முறையற்ற விதத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அவர் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். நாட்டில் அண்மையில் மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்கு இடையில் தோற்றம் பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளுடன் அவர்களுக்குத் தொடர்பு உண்டா என்ற ரீதியிலும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரின் கைதுக்கும் அரசுக்கும் இடையில் எவரும் முடிச்சுப் போட வேண்டாம். அவர்கள் மூவரினதும் விவகாரம் தொடர்பில் நீதித்துறையே இறுதி முடிவு எடுக்கும். பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை செய்யும்போது பயங்கரவாதத் தடைச் சட்டமும் பயன்படுத்தப்படும். இது புதிய விடயம் அல்ல” – என்றார்.