கனியாமூர் பள்ளி விவகாரம் – 10 நாட்களுக்குள் முடிவெடுக்க மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தையடுத்து சூறையாடப்பட்ட பள்ளியை சீரமைக்க அனுமதிப்பது தொடர்பாக பத்து நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து கடந்த ஜூலை 17ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டு யாரும் நுழையக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளியை சீரமைக்க அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட கோரி பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி சங்கம் சார்பில் அதன் பொருளாளர் முருகேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கலவரம் காரணமாக பள்ளியில் 25 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சேதத்தை சரி செய்ய வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதால் நேரடி வகுப்புகளை துவங்க பெற்றோர் வற்புறுத்தி வருதாகவும், வங்கிகளில் கடன் பெற்று பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவற்றை சரி செய்ய அனுமதிக்காததன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு பொருளாதார இழப்பு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை வளாகத்தில் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை என்பதால், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பள்ளி வளாகத்துக்குள் நுழைய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், அரசு ஏற்பாட்டின் பேரில் ஏற்கனவே ஒன்று முதல் 8 வகுப்புக்கு ஆன்லைன் முறையிலும், ஒன்பது முதல் 12ம் வகுப்புக்கு அருகில் உள்ள பள்ளியில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
பின்னர் வாதிட்ட அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, இந்த விவகாரத்தில் பள்ளி தாளாளரின் மகன் சம்பந்தப்பட்டு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாகவும் அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். மேலும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் தடயம் சேகரிக்க வேண்டி இருப்பதால் பள்ளியை சீரமைக்கும் பணியை தொடங்க அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தார்.
மேலும், விசாரணை முடிந்த பின்னர், பள்ளி சீரமைக்கும் பணிகளுக்கு மட்டும் பள்ளி நிர்வாகத்துக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் பின்னர், சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பின்னரே பள்ளி மீண்டும் செயல்பட அனுமதி வழங்க முடியும் என கூறினார்.இதனையடுத்து பள்ளி நிர்வாகம் அளித்த மனு குறித்து மாவட்ட ஆட்சியர் பத்து நாட்களுக்குள் பரிசீலனை செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.