கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளருக்கு எதிராக வர்த்தகர்கள் போராட்டம்.
கிளிநொச்சி சேவை சந்தை மரக்கறி வியாபாரிகள் இன்று 25.08.2020 (செவ்வாய்க்கிழமை) காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளருக்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி சேவைகள் சந்தை மரக்கறி வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.இந்த கலந்துரையாடலில் பல வியாபாரிகள் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து, குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளாத வியாபாரிகள் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு வியாபார நிலையங்களில் அறிவித்தல் கடிதம் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய கலந்துரையாடலின் பின்னரே வியாபார நிலையங்கள் திறக்கப்படும் என்றும் அதுவரையில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்றும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வியாபார நிலையங்களை திறக்காமை காரணமாக தமது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வியாபாரிகள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் தம்மிடம் மன்னிப்பு கோரும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.