வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வரப்போவதில்லை! – லால்காந்த தெரிவிப்பு.
“போராட்டக்காரர்களைக் கைதுசெய்து சமூகத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாது. சமூகத்தில் ஸ்திரத்தன்மை இல்லாவிட்டால் அரசியல், பொருளாதாரத்திலும் ஸ்திரத்தன்மை ஏற்படாது. அப்படியாயின் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இங்கு வரப்போவதில்லை.”
இவ்வாறு ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினர் கே.டி லால்காந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கைக்குப் பொருளாதாரத்தைக் கொண்டுவரும் வழிகளாக வெளிநாட்டில் தொழில் புரிவோர் வருமானம், சுற்றுலாத்துறை வருமானம், ஏற்றுமதி வருமானம், வெளிநாட்டு முதலீடு என்பவற்றை முக்கிய காரணியாகக் கொள்ளலாம். ஆனால், சமூக ஸ்திரத்தன்மை கிடையாது. இதனால் அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லை. அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாத நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மைய எதிர்பார்க்க முடியாது.
தற்போதைய அரசியல் அமைப்புப்படி முத்துறை அதிகாரங்களான சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை என்பன பொதுமக்கள் வசம் வரவேண்டும். தற்போது நாட்டில் மேற்படி மூன்று அதிகாரங்களும் மக்கள் கையில் இருப்பதாகக் கூறினாலும் மக்கள் அதனை தமது பிரதிநிதிகளுக்கு வழங்கி விட்டனர். உண்மையான மக்கள் கருத்து மக்கள் பிரதிநிதிகள் வசம் இல்லை.
கடந்த சில மாதங்களாக நான்கு முறை ஆட்சி மாற்றம் எற்பட்டது. ஆனால், 225 பிரதிநிதிகளில் மாற்றம் இல்லை. ஒரே நாடாளுமன்றம். அதே நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஆனால், பிரதமரும் ஜனாதிபதியுமாக நான்கு பேர் மிகக் குறுகிய காலத்தில் ஆட்சி செய்தனர். அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லை என்தையே இது காட்டுகின்றது. எனவே, அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நாட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்வர மாட்டார்கள். உள்ளவர்களும் திரும்பிச் சென்று விடுவர்.
எனவே, உள்நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமக்களின் அதிகாரம் மீளப் பெறப்பட வேண்டும். அதற்குப் பொதுத் தேர்தல் ஒன்று தேவை. இதற்காகக் கிராம மட்டத்தில் அரசியல் நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஏற்கனவே உள்ள கிராம மட்ட நிறுவனங்கள் சக்திமிக்கதாக்கப்பட வேண்டும்” – என்றார்.