காரைநகர் பிரதேச சபை மீண்டும் கூட்டமைப்பிடம் புதிய தவிசாளராகப் பாலச்சந்திரன் தெரிவு.
யாழ்., காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் க.பாலச்சந்திரன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தவிசாளராக இருந்த சுயேச்சைக் குழு உறுப்பினர் மயிலன் அப்பாத்துரை தனது பதவியை இராஜிநாமா செய்தமையால் தவிசாளர் பதவி வெற்றிடமாக இருந்தது. புதிய தவிசாளர் தெரிவு நேற்று பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.
அதன்போது , ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளினதும் தலா இரு உறுப்பினர்கள் சபைக்குச் சமூகமளிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்களும் , சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஒரு உறுப்பினருமாக 7 உறுப்பினர்கள் சபைக்குச் சமூகமளித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தவிசாளர் தெரிவு ஆரம்பமானபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் விஜயராசா , சக உறுப்பினர் பாலச்சந்திரனைத் தவிசாளராக முன்மொழிந்தார். அவருக்கு எதிராக வேறு பெயர்கள் பிரேரிக்கப்படாமையால் பாலச்சந்திரன் போட்டியின்றி ஏகமனதாகத் தவிசாளராகத் தெரிவாகினார்.