ராஜஸ்தானில் வெள்ளம்: 2 நாட்களில் 4 ஆயிரம் பேர் மீட்பு.
ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை, வெள்ளத்தால் பல மாவட்டங்கள் மூழ்கியுள்ளன. குறிப்பாக ஜலாவர், தோல்பூர், பாரன் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் 2 நாட்களில் 4 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
கோட்டா, ஜலாவர், பாரன், புண்டி மாவட்டங்களில் மீட்பு பணிகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும்போது நேற்று வெள்ளம் ஓரளவு வடிந்தபோதும், பல பகுதிகள் தொடர்ந்து மழைநீரில் மூழ்கியுள்ளன. ஜலாவர் தவிர வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கோட்டா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வெள்ளத்தால் சொத்துகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கணக்கு எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.