புதிய அமைச்சரவையில் ‘மொட்டு’வே ஆதிக்கம் – மறைமுகமாக ஒப்புக்கொள்கின்றார் பிரதமர்.
“புதிய அமைச்சரவை நியமனத்தின்போது ஒவ்வொரு கட்சிகளினதும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப உரிய இடம் வழங்கப்படும். இதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார்.”
– இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
அமைச்சரவையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அதிகளவு அமைச்சுப் பதவிகள் வழங்கவேண்டும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்திருந்த நிலையில், அது தொடர்பில் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோதே பிரதமர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புதிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது ,அந்தக்கட்சியின் முக்கியஸ்தர்கள் வலியுறுத்தியிருந்தமை உண்மைதான். எனினும், இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் ‘மொட்டு’ கட்சிக்கும் இடையில் எந்த முரண்பாடும் இல்லை.
அமைச்சுப் பதவிகள் தொடர்பில் ‘மொட்டு’க் கட்சியினர் ஏற்கனவே என்னுடனும் பேச்சு நடத்தியுள்ளனர். எனவே, யார் யாருக்கு எந்த அமைச்சு வழங்குவது என்பது தொடர்பில் ஜனாதிபதியே இறுதி முடிவு எடுப்பார்” – என்றார்.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலேயே அதிகளவானோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.