சென்னையில் 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லை: முதன்மைக் கல்வி அதிகாரி அறிக்கை
சென்னையில் உள்ள 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை என உயர் நீதிமன்றத்தில் முதன்மை கல்வி அதிகாரி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர் பி.ஆர்.சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில், “மாநிலம் முழுவதும் உள்ள பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. கல்விக்கு இணையாக உடற்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “விளையாட்டு மைதானங்கள் மட்டுமின்றி கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு செவ்வாய் அன்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலாஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் பி.முத்துக்குமார் ஆஜராகி,சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சார்பில் அறிக்கை தாக்கல் செய்தார்.
தலைமை நீதிபதிகள் முன் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், தலைமை நிர்வாக அதிகாரி, சென்னை நகரத்தில் மட்டும் 19 அங்கன்வாடி பள்ளிகள், 553 தொடக்கப் பள்ளிகள், 178 நடுநிலைப் பள்ளிகள், 193 உயர்நிலைப் பள்ளிகள், 491 உயர்நிலைப் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயாக்கள், பழங்குடியினர் நலப் பள்ளிகள் உட்பட மொத்தம் 1434 பள்ளிகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
அதில், “சென்னை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,434 பள்ளிகளில் 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. அந்த பள்ளி மாணவர்கள் அருகே உள்ள பொது விளையாட்டு மைதானங்களை பயன்படுத்துகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல 1,434 பள்ளிகளில் கழிப்பறை வசதி இருந்தாலும், 21 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை. 290 பள்ளிகளில் கழிப்பறைகளில் குப்பைத் தொட்டிகள் இல்லை” என கூறப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையைப் படித்துப்பார்த்த நீதிபதிகள், இதுபோல மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் என்னென்ன அடிப்படை வசதிகள் உள்ளன என்பது குறித்தும், விளையாட்டு மைதானங்கள் குறித்தும் அடுத்த வாரம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.