தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் சாணக்கியன் பேச்சு!
உலக நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வாறான அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியும் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
கொமன்வெல்த் அமைப்பின் 65 ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கனடாவில் நடைபெற்றது.
500 இற்கும் அதிகமான பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பல்வேறு நாடுகளின் தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்துப் பேசினார்.
குறிப்பாக தமிழக சட்ட பேரவையின் சபாநாயகர் எல்.ஏ.அப்பாவுவை சாணக்கியன் சந்தித்துப் பேசினார்.
தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல் விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டன. இலங்கைக்கு தமிழக அரசு வழங்கி வரும் உதவித் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ்ஜையும் சாணக்கியன் சந்தித்துப் பேசினார்.
மலேசியத் தமிழர்கள், இலங்கை தமிழர்களின் பிரச்சினையில் எவ்வாறு தலையிட முடியும் என்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்புகள் குறித்து கருத்து வெளியிட்ட சாணக்கியன் எம்.பி.,
“தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழர்களுடைய பங்களிப்பையும், தமிழ் அரசியல்வாதிகளின் பங்களிப்பையும் எவ்வாறு பெற்றுக்கொள்ளவது என்பது குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக உலக நாடுகள் முழுவதிலும் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து எவ்வாறு இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிப்பது என்பது குறித்து பேசியிருந்தேன்.
அத்துடன், எதிர்காலத்தில் எவ்வாறான திட்டங்களை வகுப்பது என்பது குறித்தும் அதிக கவனம் செலுத்தியிருந்தேன்” – என்று குறிப்பிட்டார்.
கொமன்வெல்த் அமைப்பின் 65 ஆவது நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான காமினி லொகுகே, சி.பி. ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோகினி கவிரத்ன, இரா. சாணக்கியன் மற்றும் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.