கட்சி மாறுவாரா ரஞ்சன்? இல்லை என்கிறார் அவர்.
“நான் கட்சி மாற மாட்டேன்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய நிபந்தனையுடனான பொது மன்னிப்பின் கீழ் இன்று பிற்பகல் விடுதலை செய்யப்பட்டார்.
அதன்பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நிபந்தனை அடிப்படையிலேயே எனக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, சில விடயங்கள் தொடர்பில் கதைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு கதைத்தால் மீண்டும் தண்டனை அனுபவிக்க வேண்டிவரும். எனக்கு உண்மை கதைத்துத்தான் பழக்கம். ஆனாலும், நிபந்தனை உள்ளது.
எனினும், பொது மன்னிப்பு வழங்கியதற்காக ஜனாதிபதிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, பிரதம நீதியரசர், நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட அனைவருக்கும் நன்றிகள். எனக்காகக் குரல் கொடுத்த மக்களுக்கும் நன்றி.
நான் மாறப்போவதில்லை. கட்சி மாறவும் மாட்டேன்” – என்றார்.