பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்தால் 3 கோடி பேர் பாதிப்பு.
பாகிஸ்தானில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலம் ஆகும். பருவமழையின் போது நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்படும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே நாடு முழுவதும் பயங்கரமாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக பாகிஸ்தானின் தெற்கு பகுதிகளை கனமழை வெளுத்து வருகிறது. மழையின் அசாதாரண அதிகரிப்பு நாடு முழுவதும் திடீர் வெள்ளத்தை உருவாக்கியது. கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான பருவமழையால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனிடையே கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 343 சிறுவர்கள் உள்பட 937 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி முதல் தற்போது 306 பேர் கனமழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் தொடர்ச்சியாக பலூசிஸ்தான் மாகாணத்தில் 234 பேரும், கைபர் பக்துங்வா மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் முறையே 185 மற்றும் 165 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 37 பேரும், கில்கிட் பிராந்தியத்தில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாலங்கள், சாலைகள் மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்புகள், மின்பரிமாற்ற உள்கட்டமைப்புகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. வெள்ளம் காரணமாக சுமார் 3 கோடி பேர் தங்குமிடம் இல்லாமல் இருப்பதாகவும், அவர்களில் ஆயிரக்கணக்கானோர் உணவு கிடைக்காமல் தவிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
நாடு முழுவதும் அவசர நிலை இந்த நிலையில் கனமழை, வெள்ள பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் காலநிலை மாற்றத்துக்கான மந்திரி ஷெர்ரி ரெஹ்மான் இதுபற்றி கூறுகையில், “பாகிஸ்தான் பருவமழையின் 8-வது சுழற்சியைக் கடந்து கொண்டிருக்கிறது; பொதுவாக நாட்டில் 3 முதல் 4 சுழற்சிகள் மட்டுமே பருவமழை பெய்யும். செப்டம்பர் மாதத்தில் மற்றொரு சுழற்சி மீண்டும் எழுவதற்கான சாத்தியக்கூறுகளை தரவு தெரிவிக்கிறது. எனவே நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது” என்றார்.