களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு பாராட்டு.
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பாராட்டு.
மட்டக்களப்பு மன்முனை தென்எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிறிய அளவிலான இடவசதி கொண்ட பிரதேச செயலகத்தினை சிறப்பாக பயன்படுத்தி அதிகளவான ஆளணியினையும் முகாமை செய்து பொதுமக்கள் சேவை புரிந்து வருவதையிட்டு அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளருக்கும் அதன் உத்தியோகத்தர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் உத்தியோகத்தர்களினது செயற்பாடுகள், முன்னேற்றங்கள் மற்றும் குறைநிறைகள் பற்றி அரசாங்க அதிபர் தெரிந்து கொள்ளும் சந்திப்பொன்று இன்று (25) மன்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலாளர் திருமதி. சிவபிரியா வில்வரட்னம் தலைமையில் அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜாவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. இதன்போது அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராட்டுத் தெரிவித்தார்.
மேலும் இச்சந்திப்பின்போது இப்பிரதேச செயலக உத்தியோகத்தர்களினது செயற்பாட்டு முன்னேற்றங்கள் ஆராயப்பட்டதுடன் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், வளப்பற்றாக்குறைகள் போன்றவற்றினைக் கேட்டறிந்து அதற்கான உடனடித் தீர்வுகள் மற்றும், எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாகவும் அரசாங்க அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது பிரதேச செயலாளர் சிவபிரியா வில்வரட்னத்தினால் அரசாங்க அதிபர் மற்றும் ஏனைய பிரதேச செயலாளர்கள், உயர் அதிகாரிகளுக்கும் மரக்கண்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட பிரதம கண்காளர் கே. ஜெகதீஸ்வரன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திருமதி. இந்திரா மேகன், மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திருமதி. ஏ. பாக்கியராஜா, அனைத்து பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக தினைக்களங்களின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.