7 ஆண்டுகள் அரசியல் தடையோடு ரணில், ரஞ்சனுக்கு வழங்கிய மன்னிப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பின் பிரகாரம் 7 வருடங்கள் நிறைவடையும் வரை அவர் தேர்தலில் நிற்க முடியாது.
“ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 34 (1) சரத்தின் கீழ் மன்னிக்கப்பட்டுள்ளார், இது நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு மற்றும் அரசியல் உரிமைகளுடன் முழுமையான ஜனாதிபதி மன்னிப்பைப் பெற அரசியலமைப்பின் 34 (2) வது பிரிவின் கீழ் அவர் மன்னிக்கப்பட வேண்டும்” என்று நீதி அமைச்சின் அதிகாரியான ரகித ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்தார்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நேற்று பிற்பகல் ரஞ்சன் ராமநாயக்கவுடன் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அரசியல் உரிமைகளுடன் கூடிய பூரண ஜனாதிபதி மன்னிப்பை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரினார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள் அடங்கிய பூரண ஜனாதிபதி மன்னிப்பை ஜனாதிபதியும் அரசாங்கமும் வழங்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இலங்கையின் சட்டத்தின்படி, இரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ஒருவர், ஜனாதிபதியின் முழுமையான மன்னிப்பைப் பெறாதவரை, 7 ஆண்டுகளுக்கு அரசியல் மற்றும் சிவில் உரிமைகளை இழக்க நேரிடும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் சிறையில் இருந்தபோதே அவர்களுக்கு பூரண ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியதுடன், விடுதலையான உடனேயே தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பையும் வழங்கியிருந்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவை போலவே, நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோது அவருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் முழு மன்னிப்பையும் வழங்கியிருந்தார். .