ஜெயலலிதா மரணம் : 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்தது ஆறுமுகசாமி ஆணையம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது ஆறுமுகசாமி ஆணையம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை அமைக்கப்பட்டது. மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட நிலையில், 14 முறை ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு, 158 பேரிடம் ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்திருக்கிறது. ஆணையம் சார்பாக 151 பேரிடமும், தங்களை விசாரிக்க வேண்டும் என்று மனு செய்த 7 பேரிடம் ஆணையம் விசாரணையை நடத்தியது.
இதில் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் – ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்களிடம் ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது.
இதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் உள்ளடக்கிய எயம்ஸ் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. பின்னர் ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தில் தனது வாக்கு மூலங்களை கொடுத்தார். பல மருத்துவர்களிடம் குறுக்கு விசாரணையும் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு தனது 3 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கொடுத்துள்ளது. அதில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 10:40 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்துள்ள சுமார் 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்பித்தார்.