அக்னிபாத் திட்டத்தின் கீழ் கூர்க்கா வீரர்கள்.. நேபாள இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்வதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு வலியுறுத்தல்
இந்திய ராணுவத்தில் நேபாள வீரர்களுக்கும் அனுமதி இருப்பதை கவனித்திருப்பீர்கள். அது நேபாளம், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 1947 இல் கையெழுத்திடப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் மூலம் தொடங்கியது.
அந்த ஒப்பந்தத்தின்படி, நேபாள இளைஞர்களை பிரிட்டிஷ் மற்றும் இந்திய இராணுவங்களில் சேர்ப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் நீட்சியாகவே இன்றும் நேபாள இளைஞர்கள் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
நேபாளத்தின் வெளியுறவு அமைச்சர் நாராயண் காட்கே புதன்கிழமை நேபாளத்திற்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவாவை சந்தித்து இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் நேபாள கூர்க்காக்களை ஆட்சேர்ப்பு செய்வதை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய இராணுவத்தின் கூர்க்கா படைப்பிரிவுகளில் 43 பட்டாலியன்கள் உள்ளன. அவை இந்திய வீரர்களையும் நேபாளத்திலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களையும் உள்ளடக்கியது.
இந்திய ராணுவத்தின் கூர்க்கா படைக்கான நேபாள இளைஞர்களின் ஆட்சேர்ப்பு லும்பினி மாகாணத்தில் உள்ள புட்வாலில் வியாழன் அன்று நடைபெற்றது. அதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த சந்திப்பு நடந்ததாக நேபாள பத்திரிகை கூறுகிறது. இந்திய ராணுவத்தில் கூர்க்காக்கள் ஆட்சேர்ப்பு செய்வதில் நேபாள அரசு சாதகமாக இருந்தாலும், இந்திய அரசின் புதிய அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்பில் நேபாள இளைஞர்களை அனுமதிப்பதில்லை தயக்கம் காட்டி வருகிறது.
இதுகுறித்து மற்ற முக்கிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசு முறையாக முடிவு செய்யும் என்று காட்கே இந்திய தூதரிடம் தெரிவித்தார்.
ஜூன் மாதம் இத்திட்டத்தை வெளியிடும் போது, இந்திய அரசாங்கம் 17 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் நான்கு ஆண்டு காலத்திற்கு ராணுவத்தில் பணியாற்றலாம் என்றது. அவர்களில் 25 சதவீதம் பேர் தொடர்ந்து வழக்கமான சேவைக்காக சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறியது.
புது தில்லியில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், இந்திய ராணுவம் நேபாளத்தில் இருந்து கூர்க்கா வீரர்களை நீண்ட காலமாக இணைத்து வருவதாகவும், அக்னிபாத் ஆட்சேர்ப்பு திட்டத்தின் கீழ் இந்த செயல்முறையை தொடர விரும்புவதாகவும் தெரிவித்தார்.
செப்டம்பர் 4 ஆம் தேதி நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரியால் வழங்கப்படும் நேபாள இராணுவத்தின் கெளரவ ஜெனரல் பட்டத்தைப் பெறுவதற்காக இந்திய இராணுவத் தலைவர் ஜெனரல் மனோஜ் பாண்டே ஐந்து நாள் பயணம் செய்ய இருக்கிறார்.
அதற்கு முன்னதாக, நாட்டின் உயர்மட்ட சிவில் மற்றும் இராணுவத் தலைமைகளுடன் விரிவான பேச்சுக்களை நடத்துவார் என்று சொல்லப்படுகிறது. அக்னிபாத் திட்டத்திலும் நேப்பாளியர்களை சேர்ப்பது குறித்து பேசுவார் என்று சொல்லப்படுகிறது.
நேபாளம் மற்றும் இந்தியாவின் இராணுவத் தலைவர்களின் வருகைகளை பரிமாறிக்கொள்வதும், இரு இராணுவத் தலைவர்களுக்கும் கெளரவ ஜெனரல் பட்டத்தை வழங்குவதும் நீண்ட பாரம்பரியம் உள்ளது.