அரசியல் தீர்வு கோரி வெருகலில் திரண்ட மக்கள்!
வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி திருகோணமலை – வெருகல் பகுதியில் இன்று (27) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
‘100 நாள் செயல்முனைவு’ எனும் திட்டத்தின் கீழ் இம்மாதம் 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் 27ஆவது நாளாக வெருகல் பகுதியில் இடம்பெற்றது.
வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது மீனவர்கள், விவசாயிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பெண்கள் அமைப்பினர், இளைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
வடக்கு – கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி தீபமேற்றப்பட்டு பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டவர்கள், “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்”, “கருத்துச் சுதந்திரம் எங்கள் உரிமை”, “ஒன்றுகூடுவது எங்கள் உரிமை”, “அரசியல் உரிமை எமக்கு வேண்டும்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியிருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள், “காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கப்பெற வேண்டும், விவசாயிகள் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு வழங்க வேண்டும், வடக்கு – கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கப்பெற வேண்டும்” – என்று தெரிவித்தனர்.