விக்னேஸ்வரன் உரையை பராளுமன்ற பதிவேட்டில் இருந்து நீக்கினால் சர்வதேச சமூகத்திடம் முறையிடுவோம் : சிவாஜிலிங்கம்
விக்னேஸ்வரன் உரையை பராளுமன்ற பதிவேட்டில் இருந்து நீக்கினால் சர்வதேச சமூகத்திடம் முறையிடுவோம் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்ற கன்னி அமர்பின் போது ஆற்றிய உரை தொடர்பில் அண்மைக்காலங்களாக அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.
குறித்த விடையம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் இன்றையதினம் கேள்வி எழுப்பிய போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்……
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.விவிக்னேஸ்வரன் அவர்கள் பாராளுமன்ற முதல்நாள் அமர்வில் சத்திய பிரமாணம் மேற்கொண்டு சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டு சபாநாயகரை கட்சித் தலைவர்கள் வாழ்த்தி உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படுவது வழமை.
அந்த நேரத்தில் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை சிங்கள இனவாதிகளை கொதித்தெழ வைத்துள்ளது எங்களுடைய வரலாற்றை எங்களுடைய விருப்பங்களை நாம் தெரிவிப்பது அவர்களுக்கு கொதிப்பினை ஏற்படுத்துகிறதென்றால் எங்களை விட்டுவிடுங்கள் நீங்கள் உங்களுடைய பாட்டிலே செல்லுங்கள் நாங்கள் எங்களுடைய வழிகளை பார்த்துக் கொள்கின்றோம் என எண்ணத் தோன்றுகின்றது.
குறிப்பாக 6ம் நூற்றாண்டு காலப்பகுதியில் தான் சிங்கள மொழி உருவாகியது அத்தோடு அவர்களுடைய சிங்கள வரலாற்றினைக் கூறும் மகாவம்சம் கூட பாலி மொழியில்தான் எழுதப்பட்டுள்ளது. தமிழருக்கான வரலாறு தமிழ் மொழியில் எழுதப்படும் அது பின்னர் வேறு மொழிகளில் மாற்றி அமைக்கலாம் தமிழ் மொழி தொன்மையான மொழி லட்சக்கணக்கான ஆண்டுகளைத் தாண்டி தமிழ்மொழி காணப்படுகின்றது.
செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒரு மொழி என்று அங்கீகரிக்கப்பட்ட பின்னர் உலகத்திலே பல நிறுவனங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அது மூத்த குடிமக்களினுடைய தமிழ்மொழி என உரையாற்றியதும் கூக்குரலிடுவதும் பாராளுமன்ற பதிவேட்டில் இருந்து நீக்குவதை பரிசீலிப்பதாக சபாநாயகர் கூறுவதும் கீழ்த்தரமான ஒரு ஜனநாயக முறைக்கு விரோதமான ஒரு செயற்பாடாகவே நான் கருதுகின்றேன்.
நீங்கள் நீக்குவதோ வைத்திருப்பதோ எதுவாக இருந்தாலும் எமது மூத்த மொழி மூத்த மொழியாகவே தான் இருக்கும் அவ்வாறு இதை நீக்கினால் நாங்கள் சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்திடமும் அதேபோல் கொமென் வெல்த் பாராளுமன்ற ஒன்றியத்திடமும், சர்வதேச சமூகத்திடம் முறையிடுவோம் என்றார்.