தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று கொடியேற்றம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனாத் தொற்றுக் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் திருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு சிறப்பாக நடைபெறவுள்ள பெருந்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமையவே பெருந்திருவிழாவுக்கான விசேட ஏற்பாடுகள் தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அன்னதானம், குடிதண்ணீர், போக்குவரத்து, வாகனத் தரிப்பிடங்கள், உணவகங்கள், தற்காலிக வியாபார நிறுவனங்கள், சாரணர் சேவை, மின் விநியோகம், அடியவர்களின் பாதுகாப்பு, சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்தல், ஆலயத் துப்புரவுப் பணி, மலசலகூட துப்புரவுப் பணி, வீதி செப்பனிடல் உள்ளிட்ட விசேட ஒழுங்குகள் அந்தந்தத் துறையினரால் முன்னெடுக்கப்பட் டுள்ளன. அத்துடன் ஆலயத்துக்கு வரும்போது அடியவர்கள் உடைமைகள், நகைகள் என்பவற்றைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறில்லையேல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
ஆலயச் சுற்றுப்புறத்தில் பொலிஸார் விசேட கடமையில் அமர்த்தப்படுவார்கள். எனவே, பக்தர்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் பொலிஸாரையும் ஆலய நிர்வாகத்தினரையும் தொடர்புகொள்ளலாம் – என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.