இலங்கை விவகாரத்தை ஒட்டி சீனா விடுத்த மறைமுக எச்சரிக்கைக்கு இந்தியா பதிலடி!
தூதரக மட்டத்தில் இரு நாடுகளும் சொற்சிலம்பம்
கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம், இலங்கைக்கான சீனத் தூதுவர், அவர் தாம் வெளியிட்ட பல கருத்துக்களால் அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை மீறியுள்ளார் எனக் குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக இலங்கை விவகாரத்தை ஒட்டி இந்தியாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் கொழும்புக்கான சீனத் தூதுவர் ஷி ஷென் ஹொங் கருத்து வெளியிட்டிருந்தார்.
”சில நாடுகள் அருகில் அல்லது தொலைவில் இருக்கலாம். பல்வேறு அடிப்படையற்ற காரணங்களை முன்வைத்து இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை மிதித்து, அசௌகரியங்களுக்கு அவை உள்ளாக்கி வருகின்றன” – என்று சீனத் தூதுவர் தெரிவித்திருந்தார்.
சீனத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையின் ஊடாக அவர் இதனைத் தெரியப்படுத்தியிருந்தார்.
“இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம் மற்றும் ஒருமைப்பாட்டு மீறப்படுவதை சீனா எந்தச் சந்தர்ப்பத்திலும் சகித்துக்கொள்ளாது. நாங்கள் இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்குவோம்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கையின் மனித உரிமை சம்பந்தமாக பேசப்படும். இலங்கை மக்கள் ஏற்கனவே கடும் பொருளாதார மற்றும் மனிதாபிமான கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
‘இந்தநிலையில், எப்போதும் மனித உரிமை சம்பந்தமாக உபதேசம் செய்யும் நாடுகள் உண்மையில் என்ன செய்ய போகின்றன என்பது தெரியாதுள்ளது” – என்றும் சீனத் தூதுவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இதற்கே கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் பதிலடி கொடுத்திருக்கின்றது.
“சீனத் தூதரின் கருத்துக்களை நாங்கள் கவனித்துள்ளோம். அவரது அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை மீறுவது அவரது தனிப்பட்ட பண்பாக இருக்கலாம். அல்லது ஒரு பெரிய தேசம் என்ற மனப்பான்மையாக இருக்கலாம்” – என்று இந்தியத் தூதரகம் தனது தொடர்ச்சியான ரூவீட்களில் தெரிவித்துள்ளது.
“இலங்கையின் வடக்கு அண்டை நாடு பற்றிய அவரது பார்வை அவரது சொந்த நாடு எவ்வாறு நடந்து கொள்கின்றது என்பதன் வண்ணமாக இருக்கலாம். இந்தியா, நாங்கள் அவருக்கு மிகவும் வித்தியாசமாக ( நாங்கள் அப்படியல்ல) என உறுதியளிக்கிறோம்.
வெளிப்படையாமை மற்றும் கடன் உந்துதல் நிகழ்ச்சி நிரல் இப்போது ஒரு பெரிய சவாலாக உள்ளது – குறிப்பாக சிறிய நாடுகளுக்கு. சமீபத்திய போக்குகள் இதற்கு ஓர் எச்சரிக்கையாகும்.
‘இலங்கைக்கு இப்போது தேவை ஆதரவுதான். மற்றொரு நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்யும் தேவையற்ற அழுத்தம் அல்லது தேவையற்ற சர்ச்சைகள் அல்ல” – என்று இந்தியத் தூதரகம் மேலும் கூறியுள்ளது.