காற்றாலை மின் உற்பத்தி நிலையச் செயற்றிட்டங்கள்: மக்கள் எதிர்ப்புக்களின் பின்னணி ஆராயப்படும்.
“மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலையச் செயற்றிட்டங்களுக்கு அதானி கிறீன் எனர்ஜி நிறுவனத்துக்குத் தற்காலிக அனுமதியே வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான எதிர்ப்புக்களின் பின்னணி குறித்து ஆராயப்படும். தேவைப்படின் அமைச்சரவையின் முடிவு மீள் பரிசீலனை செய்யப்படும்.”
– இவ்வாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேயசேகர தெரிவித்தார்.
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“குறித்த இடங்களில் இதற்கு எதிர்ப்புக்கள் வந்தால் அந்த எதிர்ப்புக்களின் பின்னணி தொடர்பில் ஆராய வேண்டும். அரசியல் பின்புலத்துடனும் அந்த எதிர்ப்புக்கள் வரக்கூடும்.இது தொடர்பில் அந்தந்த மாவட்டப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்துவோம். அமைச்சரவையின் முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை வந்தால் அதையும் நாம் செய்வோம்.
அனைத்துச் செயற்றிட்டங்களும் மக்களின் நலன் கருதியே இருக்கும். மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் செயற்றிட்டங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்காது” – என்றார்.