வெளிநாடு செல்ல முயன்ற 44 பேர் வசமாகச் சிக்கினர்!
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 44 பேரைக் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது இவர்கள் சிக்கியுள்ளனர்.
திருகோணமலைக்கு அப்பால் சந்தேகத்துக்கிடமாக பயணித்த மீன்பிடிக் படகு ஒன்று, கடற்படையின் P – 465 என்ற விரைவு படகால் இடைமறிக்கப்பட்டதுடன், அதிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 29 பேர் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் உட்பட 25 ஆண்களும், 18 வயதுக்கு மேற்பட்ட 2 பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 2 பேரும் அடங்குவர்.
அத்துடன், P 465 விரைவு படகின் மூலம் மேற்கொண்ட தொடர் சோதனையில் குறித்த மீன்பிடிப் படகுக்குக் கரையிலிருந்து நபர்களை ஏற்றிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் குச்சவெளியைச் சேர்ந்த இருவர் படகு ஒன்றுடன் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அதே கடல் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் பயணித்த மற்றொரு இலங்கையைச் சேர்ந்த பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றைக் கடற்படையின் P – 4443 என்ற விரைவு படகு மூலம் இடைமறித்து கடற்படையினர் சோதனையிட்டனர்.
அதன்போது, வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் இடம்பெயர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்ட 5 ஆண்கள் கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டனர்.
அத்துடன், P – 4443 விரைவு படகு மூலம் மேற்கொண்ட சோதனையில், லங்காபட்டுன – வாழைத்தோட்டம் கடற்கரையில், சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்லும் நோக்கத்தில் நின்றிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 10 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த மொத்தச் சுற்றிவளைப்புகளில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டவர்கள், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், அம்பாந்தோட்டை, வாழைச்சேனை, கல்முனை, அக்கறைப்பற்று மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளிவல் தெரியவந்துள்ளது.
திருகோணமலை கடற்பகுதியில் கைதான 34 பேரும் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குச்சவெளியில் கைதான இருவரும் குச்சவெளிப் பொலிஸாரிடமும் வாழைத்தோட்டம் கடற்கரையில் கைதான 10 பேரும் ஈச்சிலம்பற்றுப் பொலிஸாரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.