ஜூலை மாதம் கோட்டாவை துரத்திய ‘ஜூலி ஆபரேஷன்’
ரணில் ஜனாதிபதியான பின்னர் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கை கடுமையாக விமர்சித்து ‘டெய்லி மிரர்’ மற்றும் ‘சிலோன் டுடே’ நாளிதழ்களில் இரண்டு கட்டுரைகள் வெளியாகின.
போராட்டத்திற்கு ஜூலி சுங் வெளியிட்ட டுவிட்டர் செய்திகளை ‘டெய்லி மிரர்’ விமர்சித்திருந்ததுடன், ‘சிலோன் டுடே’ ஜூலி சுங் கோ ஹோம் போராட்டத்தை தொடங்கும் நேரம் வந்துவிட்டது என்று கூறியிருந்தது.
இந்த இரண்டு பத்திரிகைகளில் ‘டெய்லி மிரர்’ ரணிலின் மாமாவின் பத்திரிகை. இலங்கை பொலிஸாருக்குப் பொறுப்பான , பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பத்திரிகையே ‘சிலோன் டுடே’.
இதிலிருந்தே ஜூலி சாங்கிற்கு எதிராக ரணிலின் அரசு தாக்குதல் நடத்துவது தெரிகிறது.
இதேபோல மஹிந்த ராஜபக்ஷவின் அரசு காலத்தில் , இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் மைக்கல் ஜே. சிசனுக்கு (Michele J. Sison) எதிராக அரச ஊடகம் வலுவான தாக்குதலை நடத்தியது.
ஒருமுறை அவரது புகைப்படம் லேக்ஹவுஸ் பத்திரிகையில் வெளியிட்டு எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதித் தேர்தல் பொது வேட்பாளர் என செய்தி வெளியிட்டு இருந்தது.
அத்துடன், மஹிந்தவின் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக இருந்த குணரத்ன வீரக்கோன், மஹிந்தவை எதிர்த்தால் இலஞ்சம் கொடுப்பதாக தூதுவர் உறுதியளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில், ராஜாங்க அமைச்சரின் அறிக்கையை கடுமையாக விமர்சித்தது மட்டுமல்லாமல், மகிந்தவின் அரசு அமெரிக்காவுடன் மோதுவதுடன், இலங்கையை சர்வதேச அளவில் ஓரங்கட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.
அப்படி சொன்ன அதே ரணில்தான் இன்று நாட்டின் ஜனாதிபதி.
இன்று ரணில் , ஜூலி சுங் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டுவது மட்டுமின்றி, தனது நட்பு ஊடகங்கள் மூலமாகவும் அவர் மீது ரணில் தாக்குதல் நடத்தி வருகிறார்.
அன்று, மைக்கேல் ஜே. சிசனைப் போலவே, ஜூலி சுங் இன்று மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பற்றி பேசுகிறார்.
அன்று, மைக்கேல் ஜே.சிசன் , மகிந்தவின் அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய போது, மகிந்த போரில் வெற்றிபெற்ற பொறாமையில் புலம்பெயர் புலிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அவர் நாட்டைப் பிரிக்க அமெரிக்கா சார்பாக சதி செய்ய முயல்கிறார் என ராஜபக்சவாதிகள் கூறினர்.
ராஜபக்ச ஒருவர் இன்று ஜனாதிபதி நாற்காலியில் இல்லை.
இன்று ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்திருப்பது அமெரிக்காவின் செல்லப்பிள்ளை அல்லது ரணில்.
அப்போது ராஜபக்சவாதிகளால் முத்திரை குத்தப்பட்டார். இந்த அமெரிக்க செல்லம் மனித உரிமைகளை மீறும் போது,
அன்றைய அமெரிக்க தூதுவர் மைக்கேல் ஜே. சிசன் ராஜபக்சேக்கள் மனித உரிமைகளை மீறும் போது , அதற்கு எதிராக குரல் எழுப்பியது போலவே , இன்றுள்ள அமெரிக்க தூதுவரும் இந்த அமெரிக்க செல்லத்திற்கு எதிராக குரல் எழுப்புகிறார்.
ஜனாதிபதி ராஜபக்சவா அல்லது அமெரிக்க செல்லப் பிராணியா என்பது அமெரிக்காவிற்கு முக்கியமில்லை என்பதையே இது காட்டுகிறது.
அமெரிக்க அனுதாபி ஜனாதிபதி நாற்காலியில் இருந்தாலும் மனித உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் குரல் எழுப்புவது அமெரிக்காவின் கொள்கையாகும்.
அன்று, மைக்கேல் ஜே. சிசன் இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பற்றிப் பேசும்போது, அவர் இலங்கையில் மிகவும் பிரபலமான நபராக இருக்கவில்லை. எனவே அவர் புலம்பெயர் புலிகளின் விருப்பத்தையே நிறைவேற்றுகிறார்என , மகிந்த தரப்பினர் பரப்புரைகளை செய்யத் தொடங்கினர்.
ஆனால் இன்று ஜூலி சாங்கோ இலங்கையில் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒருவராக உள்ளார்.
மிரிஹானவில் உள்ள கோட்டாவின் வீட்டைச் சுற்றி போராட்டம் தொடங்கிய நாள் முதல் போராட்டத்திற்காக அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்திகளால் போராட்டத்தின் விளம்பர தூதுவராக அல்லது ஜனநாயகத்தின் தூதுவராக வேகமாக பிரபலமடைந்தார்.
அரகலய போராட்டத்தில் கட்சி பேதமின்றி அனைவரும் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது ராஜபக்சேவுக்கு வாக்களித்தவர்களும் இருந்தனர்.
அவரது ட்வீட்கள் அனைவர் மத்தியிலும் பிரபலமடைந்தன.
அந்தப் போராட்டம் அவளைப் போராட்டத்தின் ‘கார்டியன் ஏஞ்சல்’ ஆகப் பார்த்தது.
2021 வரை இலங்கை அரசியலில் இடதுசாரிகளுக்கும் ராஜபக்சேவாதிகளுக்கும் இடையே இருந்து வந்த அமெரிக்க எதிர்ப்பை ஜூலி சாங் சாமர்த்தியமாக இல்லாதொழித்தார். அமெரிக்கா சிங்களவர்களுக்கு ஆதரவான நாடு அல்ல , தமிழர்களுக்கு ஆதரவான நாடு என்ற எண்ணத்தை அழித்தாள்.
அதை ஜூலி சாங் மிக சாமர்த்தியமாக அதை செய்தார். முதலில், அவர் இலங்கையரது எண்ணத்தில் இருந்த அமெரிக்க தூதுவர் குறித்த தவறான பார்வையை மாற்றினார்.
இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவர்களின் கம்பீரமான மற்றும் பெருமைமிக்க தோற்றத்தை தவிடு பொடியாக்கினார். அவளுடைய கொரிய நாட்டு தோற்றம் அவளுக்கு அந்த உருவத்தை மாற்றுவதற்கு எளிதாக்கியிருக்கலாம். மலர் ஆடை அணிந்து, இலங்கையில் உள்ள கட்சி அலுவலகங்களுக்குச் செல்லும் அவர், மெல்லிய உடலுடன் திரியும், ஒரு சாதாரண பெண்ணாக தன்னைக் காட்டிக் கொண்டார்.
ஜே.வி.பி அலுவலகத்திற்குச் சென்றதுதான் ஜூலி சாங்கின் மிகப்பெரிய சாதனை.
ஜே.வி.பியினர் அமெரிக்காவை, மூன்றாம் உலக நாடுகளின் இரத்தம் உறிஞ்சும் பேய்க்கணவாய் (Octopus) என அழைத்து வந்தனர்
அமெரிக்காவுக்குக் கொடுத்த மோசமான அடைமொழி அர்த்தங்கள் காரணமாக, அமெரிக்கத் தூதுவர்களுடன் ஜே.வி.பியினர் உறவை ஏற்படுத்திக் கொள்வதென்பது, அரசியல் ரீதியில் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பாகிவிடும் என அஞ்சிய ஜே.வி.பியினர் அவர்களைச் சந்திக்கத் தயங்கியனர்.
ஆனால் ஜூலி சுங் குறித்து ஜேவிபி அப்படி நினைக்கவில்லை.
இன மத நிறக் கட்சி வேறுபாடற்ற அரகலய போராட்டத்தின் மூலம் ஜூலி சுங் உருவாக்கிக் கொண்டிருக்கும் மக்கள் ஆதரவு காரணமாக, ஜே.வி.பி., அவரைச் சந்திப்பது அவர்களது பிரச்சாரத்திற்கு சாதகமாக இருக்குமே தவிர, பாதகமாக இருக்காது என்பதை உணர்ந்ததனர்.
இவ்வாறு அலசும்போது ஜூலி, இலங்கை-அமெரிக்க உறவில் புரட்சியை ஏற்படுத்திய கதாபாத்திரமாகிறார்.
இன்று அமெரிக்காவிடமிருந்து உதவி பெறும் அரச சார்பற்ற நிறுவனங்கள் கூட , ரணிலுடனான நட்பினால் , ரணில் அரகலய போராட்டத்தை நசுக்குவதை கண்டு கொண்டும் எதிர்த்து பேசுவதில்லை. ஆனால் ஜூலி பேசுகிறார்.
தெற்காசியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகங்களின் நான்கு சுவர்களுக்குள் நடத்திய சதித்திட்டங்களால் அரசாங்கங்கள் வீழ்ந்த சந்தர்ப்பங்கள் பல உண்டு. ஆனால் மக்கள் எழுச்சியால் ஒரு ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்றிய முதல் சோதனை முயற்சி கோட்டா.
அது, ஒரு துளி ரத்தம் கூட சிந்தாமலாகும். அந்த போராட்டத்தில் ஜூலி ஒரு நட்சத்திரம்தான்.
2015ல் மகிந்தவை வீட்டுக்கு அனுப்பியது அமெரிக்காதான் என ராஜபக்ச தரப்பினரே கூறினர். ஆனால் அமெரிக்காதான் கோட்டாவை அரகலய போராட்டத்தினூடாக வீட்டுக்கு அனுப்பியது என யாருமே சொல்ல முடியாது. யாரும் சொல்வதுமில்லை.
அதுதான் ஜூலியின் ‘ஜூலி ஆபரேஷன்’ வெற்றி.
உபுல் ஜோசப் பெர்னாண்டோ
தமிழில் : ஜீவன்