ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, விஜயபாஸ்கர் ஆகியோரை விசாரிக்க அமைச்சரவை ஒப்புதல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணைத்தின் அறிக்கை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை அன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்பித்தது ஆறுமுகசாமி ஆணையம். அதில் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி 158 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளார். மேலும் சசிகலா உள்ளிட்ட சிலர் விசாரணைக்கு உடன்படவில்லை என்பதை எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொண்டு விசாரணையை நிறைவு செய்தார். மேலும் ஆணையத்தின் அறிக்கை தொடர்பாக தகவல்களை பொது வெளியில் தெரிவிக்க முடியாது எனவும் கூறியிருந்தார்.
அந்த அறிக்கையில் விகே சசிகலா, மருத்துவர் சிவகுமார், சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலாளர் டாக்டர் ராம் மோகன் மீது விசாரணை நடத்த வேண்டும் என ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற அமைச்சரவையில் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு அமைச்சரவை பரிந்துரை செய்தது.
அடுத்ததாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு தொடர்பாக நீதியரசர் அருணா ஜெகதீசன் நடத்திய விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 17 காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 4 அலுவலர்கள் மீது தேவையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் அதற்கான விபர அறிக்கை மற்றும் ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைதள சூதாட்டங்களை தடை செய்ய அவரச சட்டம் வகுப்பது தொடர்பாகவும் அதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.