`புதைக்கப்படாத சவப்பெட்டிகள்’ – 2,000 வருடமாக பின்பற்றப்படும் வினோதம்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு பழக்குடி இனம் இறந்தவர்களை புதைக்காமல் அவர்களின் உடல் வைக்கப்பட்ட சவபெட்டியை மலைமுகடுகளில் தொங்கவிடும் நடைமுறையை பின்பற்றிவருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் சகடா பகுதியில் ராக்ஃபேஸ், இகோரோட் எனும் பழங்குடி மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் கடந்த 2,000 ஆண்டுகளாக இறந்தவர்களை புதைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
அவர்களின் இனத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு செய்யவேண்டியச் சடங்குகளைச் செய்து, அவரின் உடலைச் சவப்பெட்டியில் வைத்துவிடுகிறார்கள். சவப்பெட்டியில் உள்ள உடல் அழுகாமல் இருக்க, மூலிகைகளால் நிறப்பப்படுகிறது. மேலும், சில மூலிகைகளின் புகையையும் காண்பித்து இறுக ஆணி அடித்து விடுகிறார்களாம்.
அதன் பிறகு அந்தச் சவப்பெட்டியை அங்கு இருக்கும் ஒரு மலையின் உச்சிக்கு எடுத்துச் சென்று அங்கிருந்தவாறே இறந்தவரின் பெயரை மூன்றுமுறை சப்தமிட்டு கூறுகிறார்களாம்.
அதன் பிறகு அந்த சவபெட்டியை கயிற்றில் கட்டி அந்த மலையில் தொங்கவிடுகிறார்களாம்.
இது தொடர்பாக அந்த பகுதி மக்கள்
“இறந்தவர் உடலை பாதுகாக்கவே இப்படி செய்கிறோம். அவரின் உடல் இருந்தால் தான் அவர் சுவனம் செல்ல முடியும். மேலும், அவரின் பெயரை மூன்றுமுறை சப்தமிட்டு கூறினால்தான், இதற்கு முன் இறந்தவர்கள், புதிதாக இறந்தவரை வரவேற்க வசதியாக இருக்கும்.
இந்த வழக்கத்தை 2000 வருடமாக தொடர்கிறோம். ஒருவேளை சவப்பெட்டியிலிருந்த உடல் அழுகிவிட்டதை அறிந்தால் அந்த சவப்பெட்டியில் மட்டும் மூலிகை ரசாயணத்தை சொட்டவிடுவோம். ஒருமுறை மூடிய சவபெட்டியில் மீண்டும் ரசாயணம் விடக்கூடாது. அது கடவுள் குத்தமாகிவிடும். ஆனாலும், இறந்தவர் சுவனம் செல்ல இந்த நடைமுறை பின்பற்றுகிறோம். இந்த சூழல் எப்போதாவதுதான் ஏற்படும்” எனத் தெரிவித்திருக்கின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்த பழங்குடி மக்களின் சவப்பெட்டி இருக்கும் இடம் சுற்றுலாத் தலமாக பிரபலமாகிவிட்டது. அதனால், தொங்கும் சவப்பெட்டிகளை பார்க்க நிறைய சுற்றுலா பயணிகள் வருவதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது.