பாகிஸ்தான் வெள்ள பாதிப்பு வேதனை அளிக்கிறது – பிரதமர் மோடி
கடும் மழை வெள்ள பாதிப்பால் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானிற்கு தனது அனுதாபங்களை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்தை பார்க்கையில் மிகவும் வேதனையாக உள்ளது. வெள்ள பாதிப்பால் சிக்கித்தவிக்கும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து, அங்கு சேதங்கள் சீரமைக்கப்பட்டு விரைவில் இயல்பு நிலை திரும்பும் என நம்புகிறேன்” என்றார்.
பிரதமர் மோடி ட்வீட் செய்வதற்கு சில மணி நேரம் முன்னதாக பாகிஸ்தான் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் இந்தியாவுடன் வர்த்தக உறவை மீண்டும் தொடங்க விரும்புவதாக கூறினார். தற்போதைய வெள்ள பாதிப்பை சமாளிக்க இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவை தொடங்கி காய்கள், உணவு பொருள்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் விரும்புகிறது என்றார்.
2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் 370 சட்டம் நீக்கிய பின் இந்தியாவுடனான வர்த்தக உறவை பாகிஸ்தான் முடக்கிக் கொண்டது. இந்நிலையில், தற்போதைய பேரிடர் சூழலை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் தரப்பு 3 ஆண்டுகளுக்குப் பின் வர்த்தகத்தை தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாத இறுதியில் பாகிஸ்தானில் தொடங்கிய பருவமழையானது கடந்த இரு வாரங்களாக வரலாறு காணாத அளவில் சீற்றத்துடன் பொழிந்து கடும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிந்த், பலுசிஸ்தான், கைபர் பக்துன்கா ஆகிய மாகாணங்களில் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளது.
அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறிய தகவலின் படி, இந்த பருவமழை பாதிப்பில் சிக்கி இதுவரை 1,033 பேர் உயிரிழந்துள்ளனர்.அந்நாட்டின் 8.09 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள், 3,451 கிமீ சாலைகள், 149 பாலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.9.49 லட்சம் வீடுகள் சேதமடைந்த நிலையில், சுமார் 7 லட்சம் கால்நடைகள் இந்த வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்துள்ளன.