ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை பாஜக கவுன்சிலர் வீட்டில் மீட்பு.. சிக்கிய குழந்தை கடத்தல் கும்பல்
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை பாஜக பிரமுகர் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்தயநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள மதுரா ரயில் நிலையத்தில் கடந்த 24ஆம் தேதி இரவு நேரத்தில் தம்பதி தங்கள் ஏழு மாத ஆண்குழந்தையுடன் நடைமேடையில் தூங்கினர்.பெற்றோரும் குழந்தையும் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குழந்தையை தூக்கி திருடிச் சென்றுள்ளார். இந்த நபர் திருடும் காட்சி ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
பெற்றோர் குழந்தையை தேடிப் பார்த்து காணவில்லை என்றதும் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், இந்த சிசிடிவி காட்சிகள் மூலம் குழந்தையை மர்ம நபர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், மதுராவில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள பிரோசாபாத் பாஜக பிரமுகர் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் பாஜகவைச் சேர்ந்த நகராட்சி கவுன்சிலரான வினிதா அகர்வாலும் அவரது கணவரான கிருஷ்ணா முராரி அகர்வாலும் தங்களுக்கு ஆண் குழந்தை இல்லை என்பதால் இந்த குழந்தையை ரூ.1.8 லட்சம் கொடுத்து வாங்கியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தம்பதி இருவருக்கும் 12 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிட்டதாக கூறுகின்றனர்.இதை அடுத்து அங்குள்ள மருத்துவர் ஒருவரிடம் இந்த குழந்தையை ரூ.1.8 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர். ரயில் நிலையத்தில் இந்த குழந்தையை திருடிய நபர் தீபக் என்றும் இவர் தான் குழந்தையை டாக்டரிடம் விற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் இந்த குழந்தை கடத்தும் கும்பலின் நெட்வொர்க் மிகப் பெரியது என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் பணத்திற்காக இந்த கடத்தலில் ஈடுபடுகின்றனர்.
குழந்தையை தூக்கி கடத்திச் சென்ற தீபக், பாஜக கவுன்சிலர் வினிதா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணா ஆகியோரை காவல்துறை கைது செய்தது. அத்துடன் இந்த நெட்வொர்கில் உள்ள 8 பேரை இதுவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், மீட்கப்பட்ட குழந்தைக்கு முறையான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.