ரூ.12,000க்கும் குறைவான சீன ஸ்மார்ட்போன்களுக்கு தடையா? – மத்திய அரசு விளக்கம்
சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரூ.12,000க்கும் குறைவான ஸ்மார்ட்ஃபோன்களை இந்தியா தடை செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்த செய்தி உண்மை அல்ல என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மறுத்துள்ளார்.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளில் பன்மடங்காக உயர்ந்துள்ள நிலையில், இந்திய செல்போன் சந்தைகளில் சீனா நிறுவனங்களான ரியல்மி, ஷாவ்மி, ஓப்போ, விவோ போன்ற நிறுவனங்களின் பட்ஜெட் செல்போன்கள் மூலம் ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இந்தியாவுடன் பல்வேறு விதமாக சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.லடாக் எல்லையில் சீனா திடீரென்று ஆக்கிரமிப்பை தொடங்கியதால் இந்தியா-சீனா வீரர்கள் மோதிக்கொண்டு இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து இந்தியாவும் எல்லையில் ஆயிரக்கணக்கில் வீரர்களை குவித்துவைத்துள்ளது.
அத்துடன் சீனாவுக்கு பதிலடி தரும் விதமாக சீன நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வகையில் டிக் டாக், வீ சாட் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, ஹூவாய், zte போன்ற நிறுவனங்களுக்கு 5ஜி தொழில்நுட்ப சாதனங்களை வழங்கவும் மத்திய அரசு அனுமதி மறுத்தது. மேலும், சமீப காலமாக சீன ஸ்மார்ட்போன்களின் வர்த்தக பரிவர்த்தனைகளை மத்திய அரசு கண்காணித்தது. அதில் அந்நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டு பல ஆயிரம் கோடி ரூபாய்களை வரி ஏய்ப்பு செய்வது தெரியவந்தது.
அந்நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் விதமாகவும் இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரூ.12,000க்கும் குறைவான ஸ்மார்ட்ஃபோன்களை மத்திய அரசு தடை செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.
ஒருவேளை இந்த தடை விதிக்கப்பட்டால் ஸ்மார்ட்போன் சந்தையில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில், மத்திய அரசுக்கு இது போன்ற எண்ணம் ஏதும் இல்லை என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விளக்கம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், “வெளிநாட்டு பிராண்டுகளை இந்தியா சந்தையில் இருந்து நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசின் இலக்கு.
அதேபோல், இந்திய பிராண்டுகளுக்கு சந்தையில் உரிய இடம் கிடைத்து அவற்றை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். சந்தையில் விலை விதிப்பில் ஏதேனும் முறைகேடு நடந்தால் அதை அரசு தலையிட்டு முறைப்படும்” என்றார்.