விநாயகர் சதுர்த்தி: சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு ஏதுவாக 350 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி நாளை (ஆகஸ்ட் 31) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூ, பொரி, பழங்கள், விநாயகருக்கு குடை ஆகியவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாளைய தினம் அரசு விடுமுறை என்பதால், பிற மாவட்டங்களில் தங்கி வேலை செய்வர்களுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஏதுவாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக விநாயக சதுர்த்தியை முன்னிட்டு 350 சிறப்பு பேருந்துகள் இன்று சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் இயக்கப்பட உள்ளது.
பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து தங்கள் ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவையை பயணிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திகொள்ளும்படியும் போக்குவரத்து கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.