ஆசிய கோப்பை – 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தார். மொசாடெக் உசைன் 30 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 48 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மஹ்முதுல்லா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் சார்பில் முஜிபுர் ரஹமான், ரஷித் கான் தலா 3 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கர்பாஸ் 11 ரன்னிலும், ஷஷாய் 23 ரன்னிலும், கேப்டன் முகமது நபி 8 ரன்னிலும் அவுட்டாகினர். இப்ராகிம் சட்ரான் நிதானமாக ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்த நஜிபுல்லா சட்ரான் அதிரடியாக ஆடி 17 பந்தில் 6 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 43 ரன்கள் குவித்தார். இறுதியில், ஆப்கானிஸ்தான் 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் சூப்பர் 4 சுற்றுக்குள் ஆப்கானிஸ்தான் நுழைந்தது. ஆட்ட நாயகன் விருது முஜிபுர் ரஹ்மானுக்கு அளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.