இருசக்கர வாகன விபத்துகளில் தமிழகம் முதலிடம்… 8,529 பேர் இறப்பு
தேசிய குற்ற ஆவண காப்பத்தின் அறிக்கையின்படி கடந்த ஆண்டில் இருசக்கர வாகன விபத்துகளில் தமிழ் நாடு முதலிடம் பிடித்துள்ளது.
2021ம் ஆண்டுக்கான குற்ற விவரங்கள் தொடர்பான அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டில் நாடு முழுவதும் சாலை விபத்துகளில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 622 பேர் மரணம் அடைந்துள்ளனர் எனவும் அவற்றில் இருசக்கர வாகன விபத்துகளால் ஏற்பட்ட மரணம்தான் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு சக்கர சாலை விபத்துகளில் 69 ஆயிரத்து 240 பேர் இறந்துள்ளனர். இது மொத்த சாலை விபத்து மரணங்களில் 44.5 சதவீதம் ஆகும். இருசக்கர வாகன விபத்துகளால் நிகழ்ந்த உயிரிழப்புகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் 8 ஆயிரத்து 259 பேர் இறந்துள்ளனர். 7,429 மரணங்களுடன் உத்தர பிரதேச மாநிலம் 2வது இடத்தில் உள்ளது.
கார் விபத்துகளை பொறுத்தவரை, மரணங்களில் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. லாரி விபத்து மரணங்களில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. பேருந்து விபத்துகளால் ஏற்பட்ட மரணங்களில் 1,337 இறப்புகளுடன் உத்தரபிரதேசம் முதல் இடத்திலும் 551 இறப்புகளுடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இதேபோல், மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரைதான் அதிகமான விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் தான் அதிக விபத்து நிகழ்ந்துள்ளது. இதேபோல் மாநில நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளால் ஏற்பட்ட மரணங்களில் உத்தரபிரதேசம் முதலிடத்தையும், தமிழ்நாடு 2வது இடத்தையும் பிடித்துள்ளன.
இதேபோல், கடந்த ஆண்டு, 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 தற்கொலைகள் நடந்துள்ளன. இவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 979 பேர். பெண்கள் 45 ஆயிரத்து 26 பேர். தற்கொலை செய்து கொண்ட பெண்களில் 23,178 பேர் குடும்ப தலைவிகள் ஆவர். இதில், 3 ஆயிரத்து 221 குடும்ப தலைவிகள் தற்கொலையுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.தற்கொலை செய்து கொண்ட ஆண்களில், தினக்கூலி தொழிலாளர்கள் முதலிடத்தில் உள்ளனர்.